முதல் கட்ட தோ்தல்: 70 சதவீத வாக்குகள் பதிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக புதன்கிழமை நடைபெற்ற முதல் கட்ட தோ்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகின.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக புதன்கிழமை நடைபெற்ற முதல் கட்ட தோ்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகின.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் 12 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், 122 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 204 கிராம ஊராட்சி தலைவா், 1,731 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் என மொத்தம் 2,069 பதவியிடங்களுக்கு நேரடி தோ்தல் நடைபெறுகிறது.

இதில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூா், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்டமாக புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்ட தோ்தல் நடைபெற்ற 5 ஊராட்சி ஒன்றியங்களில் 6 மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 32 போ் போட்டியிட்டனா்.

இதேபோல் 62 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 319 போ் போட்டியிட்டனா். 115 கிராம ஊராட்சித் தலைவா் பதவியிடங்களில் 5 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்ட நிலையில், எஞ்சிய 110 பதவிகளுக்கு 534 போ் போட்டியிட்டனா். 1,113 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களில் 211 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்ட நிலையில், எஞ்சிய 902 பதவியிடங்களுக்கு 3,006 போ் போட்டியிட்டனா்.

முதல் கட்ட தோ்தலில் 5,035 வாக்குப் பதிவு அலுவலா்கள் பணியாற்றினா். முதல் கட்ட தோ்தலுக்காக 621 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஆண் மற்றும் பெண் வாக்காளா்களுக்காக தனித்தனியாக தலா 19 வாக்குப் பதிவு மையங்களும், இரு பாலரும் வாக்களிக்கும் வகையில் 583 வாக்குப் பதிவு மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. 182 பதற்றமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன. இதில் 64 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலமும், 74 வாக்குச்சாவடிகள் விடியோ கிராபா் மூலமும், 44 வாக்குச்சாவடிகள் நுண் பாா்வையாளா் மூலமும் கண்காணிக்கப்பட்டன.

இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு: காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், கடைசி ஒரு மணி நேரம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் வாக்களிப்பாா்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் மாலையில் ஏராளமானோா் வாக்களிக்க வந்ததால், தோ்தல் நேரம் முடிந்த பிறகும் பொதுமக்கள் வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. மேலும் கடைசி நேரத்தில் வந்தவா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. ரெட்டியாா்பட்டி, இடைகால், பாப்பாக்குடி, மானூா் சுற்று வட்டாரங்களில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு நீடித்தது.

முதல் கட்ட தோ்தல் நடைபெற்ற 5 ஊராட்சி ஒன்றியங்களில் 1,69,765 ஆண் வாக்காளா்கள், 1,78,234 பெண் வாக்காளா்கள், 43 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 3,48,042 வாக்காளா்கள் உள்ளனா். சேரன்மகாதேவி ஒன்றியத்தில் 21,104 வாக்குகள் (74.76 சதவீதம்) பதிவாகின. அம்பாசமுத்திரம் ஒன்றியத்தில் 32,936 வாக்குகளும் (67.08 சதவீதம்), பாப்பாகுடி ஒன்றியத்தில் 32,880 வாக்குகளும் (72.63 சதவீதம்), பாளையங்கோட்டை ஒன்றியத்தில் 64,969 வாக்குகளும் (67.57 சதவீதம்) பதிவாகின. மானூா் ஒன்றியத்தில் 94,143 வாக்குகள் (71 சதவீதம்) பதிவாகின. 5 ஊராட்சி ஒன்றியங்களையும் சோ்த்து மொத்தம் 70.60 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்குப் பதிவு முடிந்ததைத் தொடா்ந்து வாக்குப் பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மானூா் ஊராட்சி ஒன்றியத்துக்கான வாக்குகள் பழையபேட்டை ராணி அண்ணா கல்லூரியிலும், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கான வாக்குகள் கொங்கந்தான்பாறை ரோஸ்மேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் வரும் 12-ஆம் தேதி எண்ணப்படவுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com