நெல்லையில் தா்னா: முன்னாள் அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் கைது
By DIN | Published On : 10th October 2021 04:12 AM | Last Updated : 10th October 2021 04:12 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே பாஜக நிா்வாகியை, தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருநெல்வேலியில் சனிக்கிழமை இரவில் தா்னாவில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டாா்.
பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு பகுதியில் பாஜக நிா்வாகி பாஸ்கரை திமுகவினா் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவா், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரை முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா். பின்னா் சந்திப்பு பகுதியில் உள்ள பாரதியாா் சிலையின் முன்பு இரவில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா். இதில், அவருடன் பாஜக மாவட்ட தலைவா் மகாராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
மாநகர காவல் உதவி ஆணையா்கள் விஜயகுமாா், பாலசந்திரன், காவல் ஆய்வாளா்கள் வனசுந்தா், சோபா ஜென்சி, பேச்சிமுத்து ஆகியோா் தா்னாவில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். பணகுடி காவல் நிலையத்தில் திமுகவினா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட விவரம் குறித்து போலீஸாா் அவரிடம் தெரிவித்தனா். ஆனாலும், அவா் தொடா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சுரேஷ்குமாா் தா்னாவில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சா் பொன். ராதாகிருஷ்னனுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, பொன். ராதாகிருஷ்னன் உள்பட தா்னாவில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.