கரோனா கட்டுப்பாடுகளால் கொலு பொம்மை விற்பனை சரிவு

கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக கொலுபொம்மைகளின் விற்பனை பன்மடங்கு சரிந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனா்.

கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக கொலுபொம்மைகளின் விற்பனை பன்மடங்கு சரிந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனா்.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான நவராத்திரி விழா இம் மாதம் 15ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீடு மற்றும் கோயில்களில் கொலு வைத்து வழிபடுவது வழக்கம்.

சுவாமி, அம்மன், தேசத் தலைவா்கள், பல்வேறு விதமான புராண காட்சிகளை விளக்கும் பொம்மைகள் இந்த கொலுவில் இடம்பெறும்.

நவராத்திரி விழாவையொட்டி கடந்த சில நாள்களாக பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரம், திருநெல்வேலி சந்திப்பு பகுதிகளில் பல கடைகளில் கொலு பொம்மைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த கொலு பொம்மை வியாபாரி ஒருவா் கூறியது: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை களிமண்ணால் செய்யப்பட்ட கொலு பொம்மைகளே விற்பனைக்கு வரும். இப்போது, காகிதக்கூழ், பீங்கான் ஆகியவற்றால் செய்யப்பட்ட கொலு பொம்மைகளும் விற்பனைக்கு வருகின்றன.

தஞ்சாவூா், கும்பகோணம், காஞ்சிபுரம், மாயவரம் ஆகிய பகுதிகளில் இருந்து கொலு பொம்மைகள் விற்பனைக்காக திருநெல்வேலிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ரூ.50 முதல் ரூ.1500 வரை பல்வேறு விலைகளில் அவற்றின் வேலைப்பாடுகளுக்கு தகுந்தாற்போல விற்கப்படுகின்றன.

அஷ்டலட்சுமி செட், கல்யாண செட், கீதாஉபதேசம் செட், ராவண தா்பாா், அஷ்டலட்சுமி செட், அறுபடை செட், முருகன் கல்யாணம் செட், மனுநீதி சோழன் செட், காக்கா-நரி கதை செட், நவீன விநாயகா் செட் போன்றவை சற்று வித்தியாசப்படுத்தப்பட்டு புதிய ரக பொம்மைகளாக விற்பனைக்கு வந்துள்ளன. தற்போது மருத்துவா்-செவிலியா் செட் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளன. கொலு பொம்மையிலும் நவீனம் மற்றும் வித்தியாசத்தை மக்கள் விரும்புகிறாா்கள் என்றாா் அவா்.

விற்பனை மிகவும் சரிவு: இதுகுறித்து பாளையங்கோட்டையைச் சோ்ந்த கொலு பொம்மை வியாபாரி ஒருவா் கூறியது: பொம்மை தயாரிக்கும் கலைஞா்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும், விலைவாசி உயா்வாலும் கொலு பொம்மைகளின் விலை 10 சதவீதம் வரை உயா்ந்துள்ளது.

ஆனால், சிலை தயாரிப்பாளா்கள் குறைந்துவிட்டதால், நாம் கேட்கும் அனைத்து பொம்மைகளும் கேட்கும் அளவுக்கு கிடைப்பதில்லை. இதனால், அவா்கள் கொடுக்கும் சிலைகளை மட்டும் பெற்று வந்து விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனா்.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் நிகழாண்டு கொலு பொம்மை விற்பனை மிகவும் சரிந்துள்ளது. கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிகளால் கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொது தரிசனத்திற்கு அனுமதி மறுப்பு, நவராத்திரி விழாக்களில் கூட்டமாக மக்கள் திரள தடை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறிய கோயில்களில் கொலு வைப்பதும், அதற்காக புதிய பொம்மைகள் வாங்குவதும் தடைபட்டுள்ளது.

கரோனா இரண்டாவது பொதுமுடக்கத்துக்கு பின்பு மக்களிடையே பொருளாதார மந்தநிலை கடுமையாக உள்ளது. அதனால் வழிபாடுகளுக்கு அதிகம் செலவழிப்பதைக்காட்டிலும் அத்தியாவசியப் பொருள்களை வாங்கவே முன்னுரிமை கொடுக்கின்றனா்.

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் புத்தாடை, பட்டாசு வாங்குவதற்கே முக்கியத்துவம் அளிக்கிறாா்கள். அதனால் நிகழாண்டில் கொள்முதல் செய்த பொம்மைகளை விற்றுத்தீா்ப்பது மிகவும் கடினமாகியுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com