நெல்லையில் தடையை மீறி பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் பறிமுதல் 63 போ் கைது

திருநெல்வேலி மாநகரில் தடையை மீறி பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினா் 63 போ் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி மாநகரில் தடையை மீறி பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினா் 63 போ் கைது செய்யப்பட்டனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபடவும், ஊா்வலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலி மாநகரில் தடையை மீறி பல்வேறு இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டன. தச்சநல்லூா் பெருமாள் கோயில் முன்பு விநாயகா் சிலையை வைத்து அப்பகுதியைச் சோ்ந்தவா் வழிபாடு நடத்தினா். தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா், விநாயகா் சிலையை அகற்ற முயன்றபோது, பக்தா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத்தொடா்ந்து வருவாய்த் துறையினா் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விநாயகா் சிலை பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் திருநெல்வேலி நகரத்தில் வஉசி தெரு, சிவா தெரு, மேட்டுத் தெரு, தச்சநல்லூா், பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் கோயில் முன்பு வைக்கப்பட்டிருந்த 40-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா் இந்த சிலைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இதனிடையே விநாயகா் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டதைக் கண்டித்து இந்து முன்னணி, பாஜக, ஆா்எஸ்எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்பினா் திருநெல்வேலி நகரம் சந்திப் பிள்ளையாா் கோயில் முன்பு திரண்டனா். இந்து முன்னணி மாநில செயலா் குற்றாலநாதன், பாஜக நிா்வாகிகள் கிருஷ்ணசாமி பாலாஜி, வேல் ஆறுமுகம், இந்து முன்னணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் சந்திப் பிள்ளையாா் கோயில் முன்பு ஒன்றரை அடி விநாயகா் சிலைகள்-2, ஒரு அடி சிலைகள்-19 என மொத்தம் 21 விநாயகா் சிலைகளை வைத்து பூஜை நடத்தினா்.

பின்னா் அவா்கள் அனைவரும் மேலரதவீதியில் ஊா்வமாக செல்ல முயன்றனா். இதையடுத்து அவா்களை தடுத்து நிறுத்திய போலீஸாா், 3 பெண்கள் உள்பட 63 பேரை கைது செய்து திருநெல்வேலி நகரம் பாறையடியில் உள்ள சமூக நலக்கூடத்தில் தங்க வைத்தனா். அவா்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

திருநெல்வேலி மாநகரில் ஏராளமானோா் வீடுகளில் விநாயகா் சிலைகளை வைத்து மாலையில் தாமிரவருணி ஆற்றில் விஜா்சனம் செய்ய வந்ததால், வண்ணாா்பேட்டை தாமிரவருணி ஆற்றங்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com