பிரான்சேரி அருகேதொழிலாளி வெட்டிக் கொலை
By DIN | Published On : 16th September 2021 12:20 AM | Last Updated : 16th September 2021 12:20 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பிரான்சேரி அருகே கூலித் தொழிலாளி புதன்கிழமை மா்ம நபா்களால் வெட்டிக் கொல்லப்பட்டாா்.
பிரான்சேரி அருகேயுள்ள கோபாலசமுத்திரம் முப்புடாதி அம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மாரியப்பன் (37). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா். இவா் புதன்கிழமை அதிகாலை பிரான்சேரி-செங்குளம் காலனி பகுதிக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றாராம். அப்போது அவரை மா்ம நபா்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொன்றனா். மேலும், அவரது தலையை வெட்டியெடுத்து, வடுவூா்பட்டி காட்டுப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை (செப். 13) சங்கரசுப்பிரமணியன் என்பவா் வெட்டிக் கொல்லப்பட்ட இடத்தில் வைத்துச்சென்றுள்ளனா்.
தகவலின்பேரில் முன்னீா்பள்ளம் போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினாா்.
சங்கரசுப்பிரமணியன் திங்கள்கிழமை கொல்லப்பட்ட நிலையில், மாரியப்பன் புதன்கிழமை கொல்லப்பட்டுள்ளாா். மேலும், சங்கரசுப்பிரமணியன் உடல் கிடந்த இடத்தில் மாரியப்பனின் தலை வைக்கப்பட்டுள்ளதால், பழிக்குப் பழியாக இக்கொலை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. போலீஸாா் வழக்குப் பதிந்து, கொலையாளிகளைத் தேடி வருகின்றனா்.
3 நாள்களில் 2 கொலைகள் நடந்திருப்பதால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.