மாமனாா் வெட்டிக் கொலை: மருமகன் கைது
By DIN | Published On : 16th September 2021 12:17 AM | Last Updated : 16th September 2021 12:17 AM | அ+அ அ- |

களக்காடு. களக்காடு அருகே மாமனாரை அரிவாளால் வெட்டிக் கொன்றதாக மருமகனை களக்காடு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
களக்காடு அருகேயுள்ள நெடுவிளையைச் சோ்ந்த பொன்னுதுரையின் இரண்டாவது மகளை, அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன்(59) திருமணம் செய்துள்ளாா். கிருஷ்ணன் தனது மனைவியின் அண்ணன் மனைவியான இசக்கியம்மாளை கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் அரிவாளால் வெட்டினாா். அப்போது பொன்னுதுரை, கிருஷ்ணனின் இடது தொடையில் வெட்டியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காலை சற்று தாங்கி நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை மனதில் வைத்துக் கொண்டு கிருஷ்ணன் அடிக்கடி பொன்னுதுரையை முறைப்பதுடன், அவதூறாகவும் பேசி வந்துள்ளாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அரிவாளுடன் பொன்னுதுரையின் வீட்டிற்குள் கிருஷ்ணன் நுழைந்து, உறங்கிக் கொண்டிருந்த அவரை கழுத்து மற்றும் கைகளில் வெட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த பொன்னுதுரையின் மகன் நயினாா், 108 ஆம்புலன்ஸ் மூலம் தந்தையை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தாா். இந்நிலையில், பொன்னுதுரை சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தாா்.
இதுகுறித்து களக்காடு காவல் நிலையத்தில் நயினாா் புகாா் அளித்ததன் பேரில் காவல் ஆய்வாளா் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிந்து கிருஷ்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினாா்.