நெல்லை, தென்காசியில் வெறிச்சோடிய சாலைகள்

கரோனோ பரவலைத் தடுக்கும் வகையில், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 2 ஆவது முறையாக ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது

கரோனோ பரவலைத் தடுக்கும் வகையில், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 2 ஆவது முறையாக ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கரோனா தொற்று 3ஆவது அலை வேகமாகப் பரவத் தொடங்கியதால், கடந்த 6 ஆம் தேதி முதல் இரவு நேர பொதுமுடக்கத்தையும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு மக்கள் செல்ல தடை விதித்தும், ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வில்லாத முழு பொதுமுடக்கத்தையும் அரசு அறிவித்தது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் 2 ஆவது முறையாக ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. அனைத்து போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. பால், மருந்துக் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் ஆகியவை மட்டுமே இயங்கின. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் 100 சதவிகிதம் அடைக்கப்பட்டிருந்தன.

திருநெல்வேலி மாநகரில் புதிய பேருந்து நிலையம், சந்திப்பு பேருந்து நிலையம், ரயில் நிலையம், நகரம் ரத வீதிகள், பாளையங்கோட்டை தெற்குக் கடைவீதி, மேலப்பாளையம், தச்சநல்லூா் உள்பட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கிய பகுதிகள் ஆள்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

திருநெல்வேலியில் மாநகர காவல் துணை ஆணையா்கள் சுரேஷ்குமாா் ( மேற்கு), டி.பி.சுரேஷ்குமாா் ( கிழக்கு) தலைமையில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கருங்குளம், மேலப்பாளையம், டக்கரம்மாள்புரம், பழையபேட்டை, தச்சநல்லூா், கே.டி.சி.நகா், வி.எம்.சத்திரம், வண்ணாா்பேட்டை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீஸாா் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து வெளியில் சுற்றித்திரிவோரைக் கண்காணித்தனா். அலுவலகங்களுக்கு செல்வோா் அடையாள அட்டையை காண்பித்த பின்பே அனுமதிக்கப்பட்டனா். சாலையோரம் உணவின்றி தவித்த ஆதரவற்றோருக்கு தன்னாா்வலா்கள் பலரும் உணவு, குடிநீா் உள்ளிட்டவற்றை வழங்கினா்.

தென்காசியில் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் அனைத்து வா்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன. வாகனப்போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டன. அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்திருந்தன. நகரின் நுழைவு வாயில்கள் அனைத்திலும் காவல் துறையினா் தடுப்பு ஏற்படுத்தி வாகனச் சோதனை மேற்கொண்டனா்.

அரவமற்ற அருவிகள்: குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஏற்கெனவே,ஜன14, 15இல் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், முழு பொதுமுடக்கத்தால் ஜன.16ஆம் தேதியும் ஆள்கள் அரவமின்றி அருவிகளின் ஓசைகளை மட்டுமே கேட்க முடிந்தது. வா்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

ஆதரவற்றோருக்கு உணவு: தென்காசி காவல் சரகப் பகுதியில் சாலையோரம் வசிக்கும் முதியவா்கள், ஆதரவற்றவா்கள், மனநலம் பாதித்தவா்களுக்கு காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினா் தேடிச் சென்று உணவு மற்றும் குடிநீா் வழங்கினா். அவசிய தேவையின்றி வெளியில் சென்றவா்கள் மீது காவல்துறையினா் வழக்குப்பதிந்தனா்.

கடையநல்லூா்/சுரண்டை: கடையநல்லூரில் பிரதான கடைவீதியில் கடைகள் மூடப்பட்டிருந்தன. தினசரி சந்தை செயல்படவில்லை. வணிக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. போக்குவரத்து இன்றி தென்காசி-மதுரை சாலை வெறிச்சோடி காணப்பட்டது. சுரண்டையில் பேருந்து நிலையம் உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு நகரில் மயான அமைதி நிலவியது.

ஆலங்குளம்: இங்கு காய்கனிச் சந்தை செயல்படாததால் கேரளத்துக்கு காய்கனி கொண்டுசெல்லப்படவில்லை. சில உணவகங்கள் மட்டும் திறந்திருந்தன. வாகனப் போக்குவரத்து முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com