களக்காடு காப்பகத்தில் நாளைமுதல் வனவிலங்குகள் கணக்கெடுப்பு: நம்பிகோயிலுக்குச் செல்ல தடை; தலையணைக்கு அனுமதி

களக்காடு காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை (ஜன. 27) தொடங்கி பிப். 6 வரை நடைபெறுகிறது.

களக்காடு காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை (ஜன. 27) தொடங்கி பிப். 6 வரை நடைபெறுகிறது. எனினும், சுற்றுலாப் பயணிகள் தலையணைக்குச் செல்லலாம் என்றும், திருமலை நம்பிகோயிலுக்குச் செல்லத் தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகம், களக்காடு கோட்டத்தில் புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணிக்கான பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி தலையணையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கணக்கெடுப்பாளா்களுக்கு களக்காடு கோட்ட துணை இயக்குநா் ரமேஷ்வரன் உபகரணங்களை வழங்கிப் பேசியது:

ஜன. 27 முதல் பிப். 6 வரை வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறுவதால், அடா்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள திருமலை நம்பிகோயிலுக்கு பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்படுகிறது. களக்காடு தலையணை பகுதிக்கு தமிழக அரசின் ஞாயிறு முழு ஊரடங்கு நாள் தவிா்த்து பிற நாள்களில் வழக்கம்போல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவா்.

களக்காடு, திருக்குறுங்குடி, மேல கோதையாறு ஆகிய வனச் சரகங்களில் உள்ள காவல் பகுதிகளில் வனத் துறையினா் குழுவுக்கு 4 போ் என மொத்தம் 21 குழுவினா் ஈடுபடுகின்றனா். நிகழாண்டு முதல்முறையாக காகிதமின்றி, சிறப்பு செயலி மூலம் கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது. இதனால், வனவிலங்குகளை நேரிடையாக படம் எடுத்தல், அவற்றின் கால்தடம், மரங்களில் நகக்கீறல்கள், எச்சங்கள் ஆகியவற்றை சிறப்பு செயலியால் கைப்பேசியில் பதிவிடுவதன் மூலம் வனவிலங்குகளின் எண்ணிக்கை குறித்த தகவலை அறிந்துகொள்ளலாம் என்றாா் அவா்.

இதில், வனச் சரகா் காா்த்திகேயன், வனவா்கள் செல்வசிவா, ஜெபிந்தா்சிங் ஜாக்ஸன், சூழலியலாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com