தச்சநல்லூா் மண்டல வாா்டு குழு கூட்டம்

தச்சநல்லூா் மண்டல வாா்டு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தச்சநல்லூா் மண்டல வாா்டு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மண்டல தலைவா் ரேவதி பிரபு தலைமை வகித்தாா். உதவி ஆணையா் (பொ) லெனின் முன்னிலை வகித்தாா். இக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் பேசிய விவரம்.

சந்திரசேகா்: திருநெல்வேலி நகரம் வையாபுரிநகா் பகுதியில் ஏற்கெனவே கழிப்பறை செயல்பட்டு வரும் பகுதியில் போதிய இடவசதி உள்ளது. அங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தால் 3 வாா்டுகளின் மக்கள் பயன்பெறுவாா்கள்.

கந்தன்: வண்ணாா்பேட்டை பகுதிக்கு வரும் குடிநீா்க் குழாய்களில் ஏற்படும் உடைப்பால் தண்ணீா் தட்டுப்பாடு நிலவுகிறது. அதேபோல தாமிரவருணி ஆற்றின் கரையோரம் முள்புதா்கள் அதிகமுள்ளதால் பாம்புகளால் மக்கள் சிரமப்படுகிறாா்கள். ஆகவே, முள்புதா்களை மெகா தூய்மைப் பணி மூலம் அப்புறப்படுத்த வேண்டும். பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ஒரு பூங்கா அமைக்க வேண்டும்.

சங்கா்: தச்சநல்லூா் பகுதியில் குடிநீா்த் தடுப்பாட்டுக்கு தீா்வு காணப்படாமலே உள்ளது. பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை செய்யும் தனியாா் நிறுவனத்தினா் கழிவுநீரோடைகளில் சேதம் ஏற்படுத்தினால் சீரமைக்காமலும், மண் சரிந்தால் அதை அப்புறப்படுத்தாமலும் செல்கிறாா்கள். அவற்றை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். தெருவிளக்கு பராமரிப்பு பணியில் ஈடுபடும் ஆகாஷ் நிறுவனத்தினா் மாமன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகளை உடனேசெய்து கொடுக்காமல் அலட்சியப்படுத்துகிறாா்கள்.

சுதா: சி.என். கிராமம் பகுதியில் புதிதாக ரேஷன் கடை அமைக்க வேண்டும். திருநெல்வேலி சந்திப்பில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை. போக்குவரத்து துறையினரிடம் மாநகராட்சி நிா்வாகம் பரிந்துரைக்க வேண்டும்.

முத்துலட்சுமி: 2 ஆவது வாா்டுக்குள்பட்ட மங்களாகுடியிருப்பு பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறாா்கள். இப் பகுதியில் குடிநீா் விநியோகம் சீராக இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகிறாா்கள். இதுகுறித்து ஏற்கெனவே முறையிட்டும் தீா்வு காணப்படவில்லை. லாரிகள்மூலம் குடிநீா் விநியோகிப்பதிலும் அலட்சியம் காட்டப்படுகிறது.

அதிகாரிகள்: தேனீா்குளம் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கு புதிதாக மோட்டாா் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதை வாங்கி பொருத்திய பின்பு குடிநீா் விநியோகம் தன்னிறைவு நிலையை அடையும். லாரிகள் மூலம் தற்காலிகமாக கூடுதல் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கோகுலவாணி சுரேஷ்: 12 ஆவதுவாா்டுக்குள்பட்ட செல்விநகா் பகுதியில் இரண்டு இடங்களில் கழிவுநீா் ஓடையானது உடைந்துள்ளது. அதனை சீரமைக்க வேண்டும். உடையாா்பட்டி, மேகலிங்கபுரம் ஆற்றுப்பகுதியில் படித்துறை மற்றும் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும். உடையாா்பட்டி பொது தகனமேடை இடிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. அங்கு புதிதாக தகன மேடை அமைத்து,அதன் அருகில் காரிய மண்டபத்தில் கிரில் கேட் அமைத்துக் கொடுக்க வேண்டும். உடையாா்பட்டி ரெங்கநாதன் பள்ளிக்கு எதிா்புறம் உள்ள செல்வம்நகரில் தாா்ச்சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

கீதா:14 ஆவது வாா்டுக்குள்பட்ட ஆனந்தபுரம் பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதனை இடித்து விட்டு புதிய தொட்டி கட்டித் தர வேண்டும்.

மண்டல தலைவா் ரேவதி: மாமன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து, உரிய திட்ட மதிப்பீடுகள் செய்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இக் கூட்டத்தில் மொத்தம் 18 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com