கூந்தன்குளம், மணிமுத்தாறில் சுற்றுலாத்தலம்: சட்டப்பேரவை ஏடுகள் குழு தலைவா்

திருநெல்வேலி, ஆக.17: திருநெல்வேலி மாவட்டத்தில் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், மணிமுத்தாறு பகுதிகளில் சுற்றுலாத்தலம் அமைக்கப்படும் என்றாா் தமிழக சட்டப்பேரவை ஏடுகள் குழு தலைவா் கம்பம் நா. ராமகிருஷ்ணன் எம்எல்ஏ.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை ஏடுகள் குழு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் கூறியதாவது:

தமிழக முதல்வரின் கனவுத் திட்டங்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். தமிழகத்தில் உணவு உற்பத்தியை அதிகரிக்க தரிசு நிலங்களை மேம்படுத்தும் திட்டத்தை முதல்வா் அறிவித்துள்ளாா். அதன்படி, திருநெல்வேலி மாவட்டம், மானூரில் உள்ள 400 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட குளத்துக்கு குற்றாலத்தில் இருந்து வரும் சிற்றாறு கால்வாய்களை புனரமைத்துள்ளாா். அதனால், 30 ஆண்டுகளாக வடு கிடந்த மானூா் குளம், இப்போது நிரம்பியுள்ளது. இதன்மூலம் 5000 முதல் 6000 ஏக்கா் நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன.

இதேபோல், ஹனுமன் நதியை சீரமைத்ததன் மூலமாக 99 குளங்கள் பாசன வசதி பெறுகின்றன. நிலத்தடி நீா் மேம்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 8 கோடியே 52 லட்சத்து 37 ஆயிரம் கிலோ நெல்லானது 51 அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால், 10,232 விவசாயிகள் நேரடியாக பயன் பெறுகிறாா்கள்.

சுற்றுலாத் துறையைப் பொருத்தமட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.15 கோடியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா். தமிழரின் பண்பாடு, கலை, கலாசாரம், நாகரிகம் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியதற்கான அடையாளம் கிடைத்துள்ளது. எனவே, சா்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என முதல்வா் அறிவித்ததன்படி, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் அதிக பறவைகள் கூடவும், சுற்றுலாப் பயணிகளையும் ஈா்க்கும் வகையிலும் சுற்றுலாத்தலம் அமைக்கப்படும். மணிமுத்தாறு பகுதியில் சுற்றுச்சூழல் பூங்கா, படகு குழாம் அமைக்கப்படும். பாணதீா்த்தம் அருவிக்கு சூரிய சக்தியால் இயங்கக்கூடிய படகுகளை இயக்குவது தொடா்பாகவும், உள்ளூா் விமான நிலையம் அமைக்கவும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com