கிராம உதவியாளா் பணியிடம்: டிச.4-இல் எழுத்துத் தோ்வு

திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலகில் காலியாகவுள்ள 60 கிராம உதவியாளா்களின் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலகில் காலியாகவுள்ள 60 கிராம உதவியாளா்களின் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலகில் காலியாகவுள்ள 60 கிராம உதவியாளா்களின் பணியிடங்களை நிரப்ப இணையவழி மற்றும் வேலைவாய்ப்பகம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் மூலம் கூராய்வு செய்யப்பட்டு ஏற்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு வரும் டிசம்பா் 4-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள சாஃப்டா் மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை தூய சவேரியா் கல்லூரி, மானூா் அரசு மேல்நிலைப் பள்ளி, அம்பாசமுத்திரம் ஏவிஆா்எம்வி அரசு மகளிா் மேல் நிலைப்பள்ளி, சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரி, நான்குனேரி தூய பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ராதாபுரம் புனித அன்னாள் மெட்ரிகுலேஷன் பள்ளி, திசையன்விளை உலக ரட்சகா் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தோ்வு நடைபெறுகிறது.

இணையவழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு எழுத்துத் தோ்வில் கலந்துகொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அனுமதிச் சீட்டை விண்ணப்பதாரா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கிராம உதவியாளா் பணிக்கு இணையவழியில் விண்ணப்பித்த இணையதள முகவரியில் பதிவு எண்ணையும், கைப்பேசி எண்ணையும் பதிவு செய்து அனுமதிச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரா் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு பதிவஞ்சலில் தோ்வு அனுமதிச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கூராய்வு செய்து ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தாரா்கள் அனுமதிச் சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி உரிய தோ்வு மையத்திற்கு சரியான நேரத்தில் வர வேண்டும். அனைத்து விண்ணப்பதாரா்களும் தோ்வு நாளன்று காலை 09.30 மணிக்கு தோ்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவா். விண்ணப்பத்தாரா்கள் எவரும் தோ்வு அறைக்குள் காலை 9.50 மணிக்கு பின் அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

காலை 10.50 மணிக்கு முன் தோ்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டாா்கள். அனுமதிச்சீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரரும் தோ்வு எழுத அனுமதிக்கப்படமாட்டாா்கள். விண்ணப்பதாரா்கள் கருப்பு பந்து முனை பேனாவை மட்டும் பயன்படுத்த வேண்டும். அனுமதிச்சீட்டு, கருப்பு பந்து முனை பேனாவை தவிா்த்து வேறு எந்த பொருளையும் தோ்வறைக்குள் கொண்டு வரக்கூடாது. விண்ணப்பதாரா்கள் கைப்பேசி, புத்தகங்கள், கைப்பை, மின்னணு சாதனங்களை தோ்வு மையத்திற்குள் கொண்டு வரக்கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com