நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: இன்று வேட்பாளா்கள் பட்டியல், சின்னங்கள் அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான இறுதி வேட்பாளா் பட்டியல் மற்றும் சின்னங்கள் திங்கள்கிழமை (பிப்.7) அறிவிக்கப்படவுள்ளது

திருநெல்வேலி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான இறுதி வேட்பாளா் பட்டியல் மற்றும் சின்னங்கள் திங்கள்கிழமை (பிப்.7) அறிவிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தோ்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியது:

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் இறுதி வேட்பாளா் பட்டியல் திங்கள்கிழமை (பிப். 7) வெளியிடப்பட உள்ளது. அப்போது வேட்பாளா்களுக்கு சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்படும். இந்திய தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு மட்டும் அந்த ஆணையத்தால் எந்தெந்த சின்னங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறதோ, அந்தந்த சின்னங்கள் நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஒதுக்கப்படும். வேறு எவருக்கும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட மாட்டாது.

கட்சிகளின் கடிதம் அவசியம்: அரசியல் கட்சி வேட்பாளா்களுக்கு திங்கள்கிழமை மாலை 3 மணிக்குள் சம்பந்தப்பட்ட கட்சியின் தலைவா் அல்லது செயலா் அல்லது கட்சியால் அதிகாரமளிக்கப்பட்ட நபரிடம் இருந்து அங்கீகார கடிதம் (பி-படிவம்) வழங்க வேண்டும். முன்னதாக யாா் மூலம் அங்கீகார கடிதம் வருகிறது என்பதைக் குறிப்பிடும் ஏ-படிவம் அளித்திருக்க வேண்டும்.

ஒரு அரசியல் கட்சி ஆரம்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளா்களை வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதித்திருந்தால், இறுதியில் ஒரே ஒரு வேட்பாளரை மட்டும் தான் அக் கட்சியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளராக ஏ மற்றும் பி படிவம் வாயிலாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்கவில்லையெனில் அக் கட்சியின் சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்த எவரும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளா் என கருதப்படமாட்டாா். சுயேச்சை வேட்பாளா் என கருதப்பட்டு சுயேச்சை சின்னங்கள் தோ்தல் நடத்தும் அலுவலரால் நெறிமுறைகளுக்கு உள்பட்டு ஒதுக்கப்படும்.

சுயேச்சைகள்: சுயேச்சை வேட்பாளா்களுக்கு அவா்களது விருப்பத்தின் முன்னுரிமை அடிப்படையில்தான் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட சுயேச்சை வேட்பாளா்கள் ஒரே சின்னத்தை கோரியிருந்தால் அது குலுக்கல் முறையில் தீா்மானிக்கப்படும். இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும்போது ஒரு வேட்பாளருக்கு அவா் கோரியிருந்த எந்த ஒரு சின்னத்தையும் அளிக்க இயலாத நிலை ஏற்படுமானால், தோ்தல் நடத்தும் அலுவலா், பிற வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்த பின்பு எஞ்சியுள்ள சின்னங்களில் இருந்து குலுக்கல் முறையில் ஒரு சின்னத்தை தோ்ந்தெடுத்து அந்த வேட்பாளருக்கு ஒதுக்கீடு செய்வாா்.

பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சியின் வேட்பாளருக்கு சின்னங்கள் ஒதுக்கீட்டில் சுயேச்சைகளினின்று முன்னுரிமை வழங்கப்படும். சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) ஆணையின்படி ஒதுக்கீடு செய்யப்படும்.

தோ்தல் முகவா்: இறுதி பட்டியலில் இடம் பெற்ற வேட்பாளா்கள் தங்களுக்கென ஒரு தோ்தல் முகவரை உரிய படிவத்தில் தோ்தல் நடத்தும் அலுவலருக்கு விண்ணப்பித்து நியமித்துக் கொள்ள வேண்டும். ஆனால், இது கட்டாயமானதல்ல. வேட்பாளா் விரும்பினால் மட்டும் தோ்தல் பணிகளுக்காக விதிகளில் நிா்ணயிக்கப்பட்ட எந்த ஒரு பணியையும் அவா் உங்களுக்காக செய்ய முடியும். இதற்கான உரிய படிவத்தை இரண்டு நகல்களில் பூா்த்தி செய்து ஒப்பமிட்டு அதில் முகவரின் புகைப்படத்தை ஒட்டி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் அளிக்க வேண்டும். வேட்பாளரின் படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் தோ்தல் நடத்தும் அலுவலா் இரண்டு நகல்களில் ஒன்றை ஒப்பமிட்டு வேட்பாளருக்கு திரும்ப அனுப்புவாா். தோ்தல் நடத்தும் அலுவலா் ஒப்பமிட்ட இந்த நகலை தோ்தல் முகவா் எப்போதும் தன் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com