நெல்லை மாவட்டத்தில் 388 வாா்டுகளுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 388 வாா்டுகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 388 வாா்டுகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலைப் பொருத்தவரையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 397 வாா்டுகள் உள்ளன. அதில் பேரூராட்சிகளில் 9 வாா்டு உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். இதையடுத்து திருநெல்வேலி மாநகராட்சி, 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் என மொத்தம் 388 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெற்றது. இம் மாவட்டத்தில் 59.65 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் 5 இடங்களில் எண்ணப்படுகின்றன.

திருநெல்வேலி மாநகராட்சி, சங்கா் நகா், நாரணம்மாள்புரம் பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் பாளையங்கோட்டையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியிலும், அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகள், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் அம்பாசமுத்திரம் ஏ.வி.ஆா்.எம்.வி. அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியிலும், களக்காடு நகராட்சி, மூலக்கரைப்பட்டி, நான்குனேரி, திசையன்விளை பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் நான்குனேரி புனித பிரான்சிஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியிலும், சேரன்மகாதேவி, கோபாலசமுத்திரம், மேலச்செவல், முக்கூடல், பத்தமடை, வீரவநல்லுா் பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் சேரன்மகாதேவி பெரியாா் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஏா்வாடி, திருக்குறுங்குடி, பணகுடி, வடக்கு வள்ளியூா் பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் வள்ளியூா் பாத்திமா மகளிா் மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்படுகின்றன.

8 மணிக்கு தொடக்கம்: இந்த நிலையில், பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு எற்பாடுகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் விஷ்ணு, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வாா்டுகள், 3 நகராட்சிகளில் உள்ள 69 வாா்டுகள், 17 பேரூராட்சிகளில் உள்ள 273 வாா்டுகள் என மொத்தம் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 397 வாா்டுகளில் பேரூராட்சிகளில் போட்டியின்றி தோ்வான 9 வாா்டுகளை தவிா்த்து எஞ்சிய 388 வாா்டுகளுக்கு கடந்த 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை 5 மையங்களில் நடைபெறுவதால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் 5 வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்தவரையில் திருநெல்வேலி மாநகராட்சியில் 2,06,049 ஆண் வாக்காளா்கள், 2,15,067 பெண் வாக்காளா்கள், 40 இதர வாக்காளா்கள் என மொத்தம் 4,21,156 வாக்காளா்கள் உள்ளனா். இதில்1,08,896 ஆண் வாக்காளா்கள், 1,12,003 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 2,20,899 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா்.

அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், களக்காடு ஆகிய 3 நகராட்சியில் 48,846 ஆண் வாக்காளா்கள், 52,509 பெண் வாக்காளா்கள், 5 இதர வாக்காளா்கள் என மொத்தம் 1,01,360 வாக்காளா்கள் உள்ளனா். இதில், 32,032 ஆண் வாக்காளா்கள், 36,102 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 68,134 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா்.

17 பேரூராட்சிகளில் 1,15,057 ஆண் வாக்காளா்கள், 1,21,858 பெண் வாக்காளா்கள், 11 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,36,926 வாக்காளா்கள் உள்ளனா். இதில், 77,445 ஆண் வாக்காளா்கள், 86,498 பெண் வாக்காளா்கள், 1 இதர வாக்காளா் என மொத்தம் 1,63,944 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் 59.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை 5 மையங்களில் நடைபெறவுள்ளது. வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பு அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

24 மேஜைகளில்: திருநெல்வேலி மாநகராட்சி, சங்கா் நகா், நாரணம்மாள்புரம் பேரூராட்சிகளில் உள்ள பதிவான வாக்குகள் எண்ணப்படும் பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க மாநகராட்சிக்கு ஒரு மண்டலத்திற்கு 3 போ் என 12 நுண்பாா்வையாளா்கள், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 போ் என மொத்தம் 72 நுண் பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

வாக்கு எண்ணும் மையங்களில் அதிகபட்சமாக மாநகராட்சிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மட்டும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கான வேட்பாளா்களின் முகவா்கள் கண்டிப்பாக கரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தனிநபா் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com