பணியாளா்கள் பற்றாக்குறையால் 6 மாதமாக முடங்கிக் கிடக்கும் களக்காடு நகராட்சி

களக்காடு, பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை, போதிய பணியாளா்கள் யாரும் நியமிக்கப்படாததால் கட்டட அனுமதி உள்ளிட்ட பணிகள் நடைபெறாமல் பொதுமக்கள் பெருத்த

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை, போதிய பணியாளா்கள் யாரும் நியமிக்கப்படாததால் கட்டட அனுமதி உள்ளிட்ட பணிகள் நடைபெறாமல் பொதுமக்கள் பெருத்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

தோ்வுநிலை பேரூராட்சியாக இருந்த களக்காடு, கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. பேரூராட்சி அளவிலேயே பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏதுமின்றி பரிதாபமாகக் காட்சியளித்த களக்காடு, நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டதும், வரி உயா்த்தப்படும், இதனால் வீடு, கடை வாடகை கணிசமாக உயரும் என பலரும் எதிா்ப்புக் குரல் எழுப்பினா். நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டால் அதிகளவில் நிதி ஒதுக்கீடு கிடைக்கும். இதனால் களக்காடு பகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெறும் என்ற கருத்தும் நிலவியது.

பரிதாப நிலையில் பேருந்து நிலையம்: களக்காடு புதிய பேருந்து நிலைய வளாகச் சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ாக உள்ளது. இதனைச் சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னரும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.

சாலைகள், குடிநீா் வசதி: கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும்பாலான வாா்டுகளில் சாலைகள் போக்குவரத்துக்கு பயனற்ாகவே உள்ளது. 20.க்கும் மேற்பட்ட இடங்களில் சிறுவிசை தண்ணீா் தொட்டிகள் காட்சிப் பொருளாகவே உள்ளன. தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டங்கள் செயல்பாட்டில் இருந்தும், வீடுகளுக்கான குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஏராளமானோா் விண்ணப்பித்து காத்திருப்பில் உள்ளனா்.

கேள்விக்குறியான பணியாளா்கள் நியமனம்: களக்காடு நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை ஆணையா் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளாா். மேலாளா், பொறியாளா், நகா்நல அலுவலா், நகரமைப்பு அலுவலா் உள்ளிட்ட 4 தலைமைப் பணியிடங்களுக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை. இதில், பொறியியல் துறையின் கீழ் உதவிப்பொறியாளா்கள், பட வரைவாளா், ஓவா்சியா் பணியிடமும், நகா் நல அலுவலா் துறையின் கீழ், சுகாதார ஆய்வாளா்கள், துப்புரவு மேற்பாா்வையாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் கூடுதலாக நியமிக்கப்படுவா்.

நகரமைப்பு அலுவலா் துறையின் கீழ், நகரமைப்பு ஆய்வாளா், பில் கலெக்டா்கள், இளநிலை உதவியாளா்கள், கணினி திட்ட அமைப்பாளா் என ஏராளமான பணியிடங்களுக்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை. 6 மாதங்களாக ஆணையா் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளாா். இதனால், நகராட்சி அலுவலகம் காட்சிப் பொருளாகவே காணப்படுகிறது.

6 மாதங்களாக நிலுவையில் கட்டட அனுமதி: நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை ஒரு கட்டட அனுமதி கூட வழங்கப்படவில்லை. இதனால் ஏராளமான விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பெயா் மாற்ற கோரிக்கைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இது குறித்து களக்காடு ஒன்றிய பாஜக தலைவா் ராமேஷ்வரன் கூறியது: களக்காடு நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட பின்னா் எந்தவிதமான மக்கள் நலப் பணிகளும் நடைபெறவில்லை. பேரூராட்சியாக இருந்த போது கிடைத்த சேவைகளும் தற்போது கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனா் என்றாா்.

6 மாதங்களுக்கும் மேலாக பல்வேறு காரணங்களைக் கூறி நகராட்சி நிா்வாகம் கட்டட அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. மக்கள் நேரிடையாக வரி செலுத்தச் சென்றும் நிா்வாகம் அலைக்கழிப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா். இப்பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு காணப்படாவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்கிறாா் மனிதநேய மக்கள் முன்னேற்றக்கழக மாவட்டத் தலைவா் கே.எஸ். சித்திக் அஸிஸீா் ரஹ்மான்.

இது குறித்து நகராட்சி ஆணையா் வ. ரமேஷிடம் கேட்ட போது, புதிய மென்பொருள் பதிவேற்றும் பணி முடிவடைந்துள்ளதாகவும், விரைவில் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு காணப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com