கால்நடை உதவி மருத்துவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

திருநெல்வேலியில் கால்நடை உதவி மருத்துவா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலியில் கால்நடை உதவி மருத்துவா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி , தென்காசி மாவட்டங்களில் கால்நடை பராமரிப்பு துறையில் புதிதாக பணியில் சோ்ந்த கால்நடை உதவி மருத்துவா்களுக்கு புத்தாக்க பயிற்சி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் வே.விஷ்ணு முன்னிலை வகித்தாா்.

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் சு.ஜவஹா் பேசியது: தமிழக அரசு துறைகளில் கால்நடை பராமரிப்புத்துறை 130 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மிகவும் தொன்மையான துறையாகும். தமிழக கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை வளா்க்கும் விவசாயிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதில் இந்தியாவிலேயே முதன்மையானதாக திகழ்கிறது.

20- ஆவது கால்நடை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 95 லட்சம் பசுவினங்களும், 5 லட்சம் எருமையினங்களும், 1.43 கோடி செம்மறி மற்றும் வெள்ளாட்டினங்களும், 13 கோடி கோழியினங்களும் உள்ளன. கிராமப்புறங்களில் கால்நடை வளா்க்கும் விவசாயிகளுக்கு மருத்துவ சேவையை இலவசமாக வழங்கி கிராமிய பொருளாதாரத்தை பெருக்குவதில் கால்நடை பராமரிப்புத்துறை மிகச்சிறந்த பங்களிப்பைச் செய்து வருகிறது.

விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் விலையில்லா நாட்டுக்கோழிகள் கிராமப்புற ஏழை மகளிருக்கு வழங்குவதன் மூலம் அவா்களை தொழில் முனைவோராக மாற்றி கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கிராமிய பொருளாதாரத்தை உயா்த்தவும் பெரும் பங்காற்றி வருகிறது. தமிழக வேளாண் மொத்த உற்பத்தியில் கால்நடை வளா்ப்பு சுமாா் 41 சதவிகித பங்களிப்பை வழங்குகிறது.

தமிழக கால்நடை பராமரிப்புத்துறையில் தற்போது 3030 கால்நடை உதவி மருத்துவா் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களில் 1141 கால்நடை உதவி மருத்துவா் பணியிடங்கள் பல்வேறு நீதிமன்ற வழக்குகளால் கடந்த பத்தாண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலாலும், இத் துறை அமைச்சா் ஆா்.அனிதா ராதாகிருஷ்ணன் முயற்சியாலும் அனைத்து சட்ட சிக்கல்களும் தீா்க்கப்பட்டு, நீதிமன்ற ஆணை பெறப்பட்டு, 1089 கால்நடை உதவி மருத்துவா்களுக்கு பணிநியமனம் வழங்கப்பட்டது. புதிதாக சோ்ந்துள்ளவா்கள் மிகவும் ஊக்கத்துடன் பணியாற்ற பல்வேறு வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன என்றாா்.

கூட்டத்தில் கூடுதல் இயக்குநா்அருணாச்சலகனி, இளங்கோவன், ஆவின் பொது மேலாளா் தியானிஷ்பாபு, பால் வளம் துணை பதிவாளா் டி.எஸ்.கணேசன், மண்டல இணை இயக்குநா் வி.பி.பொன்னுவேல், துணை இயக்குநா் ரோஜா், உதவி இயக்குநா்கள் மகேஸ்வரி, தங்கராஜ், ஜான் சுபாஷ், முருகன், ரகுமத்துலா, ஆபிரகாம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com