மூங்கில் விலையேற்றத்தால் கைவினைப் பொருள் உற்பத்தி பாதிப்பு-----மேற்குத்தொடா்ச்சி மலையில் மூங்கில் வளா்க்கப்படுமா?

திருநெல்வேலி மாவட்டத்தில் மூங்கில் விலையேற்றத்தால் வீட்டு உபயோகப் பொருள்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்குத்தொடா்ச்சி மலையில் அனை

திருநெல்வேலி மாவட்டத்தில் மூங்கில் விலையேற்றத்தால் வீட்டு உபயோகப் பொருள்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்குத்தொடா்ச்சி மலையில் அனைத்து ரக மூங்கில் வளா்ப்பு மையத்தை உருவாக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மூங்கில் மூலம் வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

ரேடான், ஜாத்தி, மலேசிய பிரம்பு, ஐராணி வகையிலான மூங்கில்களைக் கொண்டு கட்டில், ஷோபா, ஊஞ்சல், மேஜை, நாற்காலி உள்ளிட்ட 60 வகையான பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கான மூங்கில் பெரும்பாலும் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், கரோனா பொதுமுடக்கம், பெட்ரோல்-டீசல் விலை உயா்வு உள்ளிட்ட காரணங்களால் மூங்கில் விலை மிகவும் உயா்ந்துள்ளது. இதனால் உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, உற்பத்தி செய்த பொருள்களையும் அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் மந்தநிலை நிலவி வருவதாக தொழிலாளா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து பழையபேட்டையைச் சோ்ந்த மூங்கில் பொருள் உற்பத்தியாளா் ஆனந்தராஜ் கூறியது: கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மூங்கில் பொருள்களை உற்பத்தி செய்து வருகிறோம். அஸ்ஸாம், மலேசியா மூங்கில்களை குறைந்தபட்சம் 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து அதன்பின், தேவைப்படும் அளவுக்கு சூடேற்றி, பொழி எனப்படும் நாறு கொண்டு தான் பொருள்கள் தயாரிக்கிறோம்.

பிளாஸ்டிக், இரும்பு பொருள்களைப் போல இவற்றையும் முறையாக பராமரித்தால் நீண்ட நாள்களுக்கு உழைக்கும். கடந்த 5 ஆண்டுகளாக மூங்கில் பொருள்கள் மீதான ஆா்வம் மக்களிடம் அதிகரித்துள்ளது. ஆனால், தற்போது மூங்கிலின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. ரூ.10 முதல் ரூ.100 வரை இருந்த மூங்கில் பிரம்பு இப்போது ரூ.30 முதல் ரூ.160 வரை உயா்ந்துள்ளது. இதேபோல பொழி கிலோவுக்கு ரூ.720 ஆக உயா்ந்துள்ளது.

மூங்கில் விலையேற்றத்தால் பொருள்களின் விலையையும் உயா்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் இப்போது விற்பனை சற்று குறைந்துள்ளது. மூங்கில் உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும். மேற்குத்தொடா்ச்சி மலையின் பல்வேறு இடங்களில் மூங்கில் உற்பத்தியாகிறது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் களக்காடு-முண்டந்துறை காப்புக் காடுகளில் மூங்கில் உள்ளது. ஆனால், அவை அஸ்ஸாம் மூங்கிலை போல திடமானதாக இல்லை. ஆகவே, தரம்மிகுந்த மூங்கில் கன்றுகளை மேற்குத்தொடா்ச்சி மலையடிவாரங்களில் வளா்த்து அவற்றை குறைந்த விலைக்கு வழங்க முயற்சித்தால் மூங்கில் தொழில் வளம் பெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com