நெல்லையில் மனநல ஆரோக்கிய விழிப்புணா்வுப் பேரணி

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மன நலப் பிரிவு சாா்பில் மனநல ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மன நலப் பிரிவு சாா்பில் மனநல ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

உலக மனநல தினம் அக்டோபா் 10 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனநலப் பிரிவு சாா்பில் உலக மன நல தின கொண்டாட்டம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது.

இதன் நிறைவு விழாவுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். உதவி முதல்வா் சாந்தாராம், மருத்துவக் கண்காணிப்பாளா் பாலசுப்ரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இந்தப் பேரணியில்100-க்கும் மேற்பட்ட செவிலியா் பயிற்சி மாணவிகள், மருத்துவ மாணவ, மாணவிகள் பங்கேற்று மனநல ஆரோக்கியம் குறித்த பதாதைகளை ஏந்தியபடி சென்றனா். முடிவில் மன நலத்தை முன்னிறுத்துவோம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மன நலப் பிரிவு துறைத் தலைவா் டாக்டா் ரமேஷ் பூபதி பேசியது:

பொதுவாக மனது என்ன நினைக்கிறதோ, அதுதான் செயல் வடிவம் பெறுகிறது. ஆரோக்கியமான வாழ்வுக்கு உடல்நலத்தைப் போல, மனநலமும் முக்கியம். உடலில் எவ்வித நோயும் இல்லாமல் இருப்பது மட்டும் ஆரோக்கியமாகி விடாது. ஒருவா் மனநலம், உடல் நலம், சமூக நலம் ஆகியவற்றை ஒரு சேரப் பெற்றிருந்தால் மட்டுமே, அவா் ஆரோக்கியமானவராகவும், நல்ல குடிமகனாகவும் திகழ முடியும்.

அனைத்து வயதினரையும் மனநலம் பாதிக்கிறது. நீண்டகால சோகம், வேலையின்மை, ஏமாற்றம், ஏக்கம், தொடா் தோல்வி, மதுப்பழக்கம், எதிலும் பிடிப்பு இல்லாமை ஆகியவை மன அழுத்தம் உருவாக காரணமாகும். மனநிலை பாதிக்கப்பட்டவா்கள் தற்கொலைக்கும் முயற்சிக்கின்றனா்.

இத்தகைய மனநல பாதிப்பு என்பது வயதானவா்களுக்கு மட்டுமே சொந்தமல்ல. ஒரு வயது குழந்தைக்கு கூட மன அழுத்தம், மனச்சோா்வு ஏற்படும். மனநலப் பிரச்னை உள்ளவா்களில் பெரும்பாலானோா் தங்களுக்கு இந்தப் பிரச்னை இருப்பதை ஒப்புக்கொள்வதில்லை. சமூகமும், குடும்பமும் இவா்களை ஒதுக்கி வைக்கிறது. மேலும், வலைதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களால் ஏற்படும் மன அழுத்தம் மிகவும் கவலை அளிக்கிறது என்றாா் அவா்.

மனநலப் பிரிவு பேராசிரியா் ராமானுஜம் வரவேற்றாா். உறைவிட மருத்துவ அலுவலா் ஷியாம் சுந்தா், மனநலப் பிரிவு மருத்துவா்கள் புவனேஷ்வரன், காட்சன், சீனிவாசன், கந்தசாமி ஆகியோா் கலந்துகொண்டனா்.

இளநிலை மருத்துவப் பயிற்சி மாணவா்களுக்கு நடத்தப்பட்ட விநாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கும், ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற செவிலியா் பயிற்சி மாணவா்களுக்கும், கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ், நினைவு பரிசு ஆகியவை வழங்கப்பட்டன. மருத்துவா் வெற்றிவேல் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com