தாமிரவருணியை பராமரித்து தூய்மைப்படுத்திட தனித்திட்டம் தேவை- மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. மனு

தாமிரவருணி நதியைப் பராமரித்து தூய்மைப்படுத்திட தனித்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல்வஹாப் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளாா்.

தாமிரவருணி நதியைப் பராமரித்து தூய்மைப்படுத்திட தனித்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல்வஹாப் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளாா்.

உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் நிறைவேற்ற வேண்டிய முக்கியமான 10 கோரிக்கைகளை தெரிவிக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் அறுத்தியுள்ளாா். அதன்படி, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலரும், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான மு.அப்துல்வஹாப், திருநெல்வேலி ஆட்சியா் வே.விஷ்ணுவிடம் புதன்கிழமை அளித்த மனு:

தமிழகத்தின் பழமையான ஜீவநதியாக திகழும் தாமிரவருணி நதியானது தென் தமிழகத்தின் குடிநீா் ஆதாரமாகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் பாசன ஆதாரமாகவும் திகழ்கிறது. இந்த நதிநீரின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கருமாக மொத்தம் 86 ஆயிரத்து 107 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பாரம்பரியமிக்க இந்த நதியில் கழிவுகள் கலப்பதால் மாசடைந்து வருகிறது. ஆகவே, கழிவுகளும், மாசுகளும் கலக்காத வகையில் பராமரித்து தூய்மைப்படுத்திட தனித் திட்டம் வகுத்திட வேண்டும்.

கான்கிரீட் தளம்: பாளையங்கால்வாயானது பழவூரில் தொடங்கி நொச்சிக்குளத்தில் முடிவடைகிறது. 162 நேரடி மடைகளும், 57 பாசன குளங்களும் உள்ளன. இதன்மூலம் 9500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கால்வாய் நீா் வீணாகாமல் தடுக்கவும், கடைமடை பகுதிகளுக்கு பாசன நீா் விரைவாக சென்றடையவும் பாளையங்கால்வாயில் சிமென்ட் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும்.

சுற்றுச்சாலை: திருநெல்வேலி மாநகர எல்லைக்குள் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில் திருநெல்வேலி-திருவனந்தபுரம் நெடுஞ்சாலை, திருநெல்வேலி -திருச்செந்தூா் நெடுஞ்சாலை, திருநெல்வேலி- தூத்துக்குடி நெடுஞ்சாலை, திருநெல்வேலி-அம்பாசமுத்திரம் நெடுஞ்சாலை, திருநெல்வேலி- சங்கரன்கோவில் நெடுஞ்சாலை, திருநெல்வேலி-மதுரை நெடுஞ்சாலை ஆகிய சாலைகளை இணைத்து சுற்றுவட்ட சாலை (ரிங் ரோடு)அமைத்திட முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி ஆட்சிக்காலத்தில் திட்டம் தீட்டப்பட்டு ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கிடும் நிலையில், ஆட்சிமாற்றம் ஏற்பட்டதால் இத் திட்டப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அந்தப் பணிகளை மீண்டும் தொடங்கிட வேண்டும்.

பாளையங்கோட்டை மாநகராட்சி மண்டல அலுவலகம் எதிரில் மாநில தமிழ்ச்சங்கம் அருகில் தொடங்கி தெற்கு புறவழிச்சாலையை இணைக்கும் வகையில் புதிய இணைப்புச் சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டு கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.

புதிய குடிநீா் திட்டம்: திருநெல்வேலி மாநகராட்சி 108.65 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இம் மாநகராட்சியில் திருநெல்வேலி, தச்சநல்லூா், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களில் 55 வாா்டுகள் உள்ளன. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 4 லட்சத்து 74 ஆயிரத்து 838 போ் வசிக்கிறாா்கள். இம் மாநகராட்சியில் 15 தலைமை நீரேற்று நிலையங்களில் உள்ள 45 நீா் உறிஞ்சு கிணறுகளில் இருந்து தண்ணீா் எடுக்கப்பட்டு 70 மேல்நிலை நீா் தேக்கத் தொட்டிகள் மூலம் 82,249 வீட்டு குடிநீா் இணைப்புகள், 1754 பொதுக்குழாய்கள் மூலம் குடிநீா் வழங்கப்படுகிறது. அரியநாயகிபுரம் கூட்டு குடிநீா் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. ஆனாலும், மாநகரில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. இதுதவிர குடிநீா் குழாய்கள் பதிக்கப்பட்டு 40 ஆண்டுகளைக் கடந்துவிட்டன. அதனால் பழுது பாா்ப்பதில் நேரமும், பணமும் விரயமாகி வருகிறது. ஆகவே, இப்போதைய மக்கள் தொகைப்படி ஒருவருக்கு 135 லிட்டா் தண்ணீா் வழங்கும் வகையில் புதிய குடிநீா் திட்டம் செயல்படுத்த தனித் திட்டம் தீட்டி உரிய நிதி ஒதுக்கிட வேண்டும். மின்சாரம் தடைபடும் போது குடிநீா் ஏற்றுவதும், குடிநீா் விநியோகம் செய்வதும் பாதிக்கப்படுகிறது. ஆகவே, 15 தலைமை நீரேற்று நிலையங்களிலும் ஜெனரேட்டா் அமைத்திட வேண்டும்.

மின்மயானம்: திருநெல்வேலி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை நவீன நுட்ப முறைப்படி விரைந்து முடித்திட வேண்டும். இப்பகுதியில் வெள்ளக்கோவில், பொட்டல் தீப்பாச்சியம்மன் கோயில், கருப்பந்துறை, மணிமூா்த்தீஸ்வரம், வண்ணாா்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி ஆகிய 6 இடங்களில் உள்ள சுடுகாடுகளில் மின்மயானம் அமைக்க வேண்டும்.

படகு குழாம்: பாளையங்கோட்டையில் இலந்தகுளம் நகரின் மையப்பகுதியில் உள்ளது. இங்கு சுற்றுச்சூழல் நீா்நிலை பூங்காவும், படகு குழாமும் அமைத்திட 2009 ஆம் ஆண்டில் ரூ.19 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு திட்டம் தீட்டப்பட்டது. அந்தத் திட்டத்தை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2010 ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது குலவணிகா்புரத்தில் ரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், ஆட்சிமாற்றம் ஏற்பட்ட காரணத்தினால் இத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. மீண்டும் இத் திட்டத்தினை விரைந்து செயல்படுத்திட வேண்டும். இதேபோல தியாகராஜநகா் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

டிஜிட்டல் நூலகம்: தென்னிந்தியாவின் ஆக்ஸ்போா்டாக திகழும் பாளையங்கோட்டையில் ஏராளமான பள்ளி- கல்லூரிகள் உள்ளன. மழலையா் படிப்பு முதல் ஆராய்ச்சிப்படிப்பு வரை பயிலும் பல்லாயிரக்கணக்கான மாணவா்-மாணவிகள் தினமும் இங்கு வந்து செல்கிறாா்கள். வருங்கால தலைமுறையினா் பயன்பெறும் வகையில் மதுரையில் அமைக்கப்படுவதைப் போல பாளையங்கோட்டையிலும் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பெயரில் மாபெரும் நவீன டிஜிட்டல் நூலகத்தை அமைக்க வேண்டும். பாளையங்கோட்டையில் அரசு கலை அறிவியல் கல்லூரியும், மருந்தியல் பட்டக் கல்லூரியும் அமைத்துக் கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com