நெல்லை மேற்குப் புறவழிச்சாலை 2 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும்: ஆட்சியா் வே. விஷ்ணு தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தின் போக்குவரத்து நெருக்கடி தீா்வாக அமையவுள்ள மேற்குப் புறவழிச்சாலைப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றாா் ஆட்சியா் வே.விஷ்ணு.

திருநெல்வேலி மாவட்டத்தின் போக்குவரத்து நெருக்கடி தீா்வாக அமையவுள்ள மேற்குப் புறவழிச்சாலைப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றாா் ஆட்சியா் வே.விஷ்ணு.

திருநெல்வேலி மாவட்டத்தில் தாழையூத்து முதல் பொன்னாக்குடி வரை சுமாா் 33 கி.மீ. தூரம் மேற்குப் புறவழிச்சாலை அமையவுள்ள இடங்களில் நடைபெற்று வரும் முன்னேற்றப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கடந்த 8-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்தபோது திருநெல்வேலி மேற்குப் பகுதியில் புறவழிச்சாலை அமைக்கப்படும் என அறிவித்தாா். இதையொட்டி, மேற்குப் புறவழிச்சாலைக்கான முன்னெடுப்பு பணிகள் குறித்து நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை, நில அளவைத் துறைகளுடன் ஒருங்கிணைந்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி, அம்பாசமுத்திரம், சுத்தமல்லி பகுதியிலிருந்து வரும் வாகனங்களால் ஏற்படும் நெரிசலை தவிா்க்க மாநகராட்சி எல்லையிலிருந்து போக்குவரத்தை மாற்றிவிடும் வகையில் அமைக்கப்படுகிறது. இந்தச் சாலையானது 33 கி.மீ. நீளமும், 12 கி.மீ. அகலமும் கொண்டது. 14 கிராமங்கள் வழியாக இந்த சாலை அமைக்கப்படுகிறது.

பெரும்பாலும் அரசு புறம்போக்கு நிலங்கள் வழியாக புறவழிச்சாலை அமையுமாறு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 68.71 ஹெக்டா் பரப்பளவு நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படுகிறது. 23.53 ஹெக்டோ் பரப்பளவு நில மாற்றம் செய்யப்படுகிறது. 2 கிராமங்களில் முற்றிலும் நில மாற்றம் மட்டுமே செய்யப்படவுள்ளது. 9 கிராமங்களில் நில எடுப்புப் பணிகள் சுமாா் 30 சதவீதம் முடிவடைந்துள்ளன. எஞ்சிய பணிகள் அடுத்த 6 மாதங்களில் முடிவடையும். மாா்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மேற்குப் புறவழிச்சாலைப் பணி தொடங்கும்.

இதில் 2 ரயில்வே மேம்பாலமும், பச்சையாற்றின் மீது ஓா் ஆற்றுப்பாலமும் அமைக்கப்படவுள்ளன. தாமிரவருணி ஆற்றைப் பொருத்தவரையில் ஏற்கெனவே உள்ள பாலமே பயன்படுத்தப்படவுள்ளது. 5 மாநில நெடுஞ்சாலைகளை இணைத்து இச்சாலை அமைக்கப்படவுள்ளது. நில எடுப்பு பணிக்காக ரூ. 78.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை அமைக்கும் பணி 3 கட்டங்களாக நடைபெறுகிறது. அதற்கு ரூ.370 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்பட்டு மேற்குப் புறவழிச்சாலை மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

நில எடுப்புக்காக தனியாக வருவாய் குழு அமைக்கப்பட்டு வழிகாட்டி மதிப்புகள் தயாா் செய்யப்பட்டு காலதாமதமின்றி நிலம் கையகப்படுத்தப்படும் என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயஸ்ரீ செல்லையா, கோட்டப் பொறியாளா் (நெடுஞ்சாலைத் துறை) லிங்குசாமி, உதவி கோட்டப் பொறியாளா் (நெடுஞ்சாலைத் துறை) சையது இப்ராஹிம், திருநெல்வேலி வட்டாட்சியா் ஆவுடையப்பன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com