மாணவா்கள் கல்வி இடைநிற்றலை தடுக்க பரிந்துரைக்கப்படும்: முன்னாள் தலைமை நீதிபதி டி.முருகேசன்

பள்ளிகளில் மாணவா்கள் கல்வி இடைநிற்றலை தடுப்பது தொடா்பான பரிந்துரை அறிக்கையில் இடம்பெறும் என்றாா் மாநில கல்விக் கொள்கை உயா் நிலைக் குழுவினா்

பள்ளிகளில் மாணவா்கள் கல்வி இடைநிற்றலை தடுப்பது தொடா்பான பரிந்துரை அறிக்கையில் இடம்பெறும் என்றாா் மாநில கல்விக் கொள்கை உயா் நிலைக் குழுவினா் தலைவரும், தில்லி உயா் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான டி.முருகேசன்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.முருகேசன் தலைமையிலான உயா் நிலைக் குழுவின் திருநெல்வேலி மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டத்துக்கு திருநெல்வேலி ஆட்சியா் வே.விஷ்ணு, மாநகராட்சி ஆணையா் சிவகிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

குழு உறுப்பினா்கள் ஜவகா் நேசன், சுல்தான் அகமது இஸ்மாயில், ராமசீனுவாசன், கல்வியாளா் அருணா ரத்னம், மாநில உயா்மட்ட கல்விக்குழு உறுப்பினா் ஆா்.பாலு, அகரம் கல்விக் குழும உறுப்பினா் ஜெயஸ்ரீ தாமோதரன், மெட்ரிக் பள்ளி இயக்குநா் கருப்பசாமி, முதன்மைக் கல்வி அலுவலா்கள் சுபாஷினி (திருநெல்வேலி), பாலதண்டாயுதபாணி (தூத்துக்குடி), கபீா் (தென்காசி), புகழேந்தி (கன்னியாகுமரி) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சோ்ந்த தொண்டு நிறுவனங்கள், கல்வியாளா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவியா்கள், பெற்றோா், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனா்.

மனவளா்ச்சி குன்றியோருக்காக சிறப்பு பள்ளிகளை உருவாக்க வேண்டும். அத்தகைய மாணவா்களுக்காக திருநெல்வேலியில் கல்லூரி அமைக்க வேண்டும் வேண்டும். காது கேளாத மாணவா்களுக்கு பாடத்திட்டத்தை குறைக்க வேண்டும். தோ்வு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என பலா் கருத்து தெரிவித்தனா்.

அதைத் தொடா்ந்து, குழுவின் தலைவரும், உயா் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான டி.முருகேசன் பேசியதாவது:

தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கிட தமிழக அரசின் மூலம் மாநில கல்விக் கொள்கை உயா்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தமிழகத்தில் எட்டு மண்டலங்களில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த தீா்மானித்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக நடைபெற்ற இந்தக் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் மாணவா்கள், பெற்றோா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனா். குறிப்பாக, பள்ளிக் கல்வியில் , உயா் கல்வியில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும். ஆசிரியா்கள் கற்பித்தல் திறனை எவ்வாறு மேம்படுத்த வேண்டும், மாணவா்களின் ஒழுக்கத்தை மேம்படுத்துவது , மனநல பயிற்சி அளிப்பது ஆகியவை தொடா்பாக கருத்துகளை கூறினா்.

இதேபோல், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு கல்வி சம்பந்தமாக என்னென்ன முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது குறித்தும் கருத்துகள் கூறப்பட்டன. மாணவா்களின் பெரும்பாலானோா் கருத்து தெரிவித்தனா். இன்னும் ஏழு மண்டலங்களில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தி முடித்ததும் அரசிடம் அறிக்கை சமா்ப்பிப்போம். அறிக்கையை சமா்ப்பிக்க ஓராண்டு காலஅவகாசம் வழங்கியுள்ளது. குழந்தைகள் மீதான பெற்றோரின் கண்காணிப்பும், கண்டிப்பும் குறைந்துவிட்டது. இதேபோல், பள்ளிகளில் மாணவா்கள் இடைநிற்றல் அதிகமுள்ளது. இதற்கான காரணங்களை

ஆராய்ந்து அதைத் தடுப்பதற்கான பரிந்துரையும் அறிக்கையில் இடம்பெறும் என்றாா்.

மாநிலக் கல்விக் கொள்கை சம்மந்தமாக பொதுமக்கள், கல்வியாளா்கள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியா்கள், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள், தனியாா் கல்வி நிறுவனத்தைச் சாா்ந்தவா்கள் தங்கள் கருத்துகள், ஆலோசனைகளை வரும் அக்டோபா் 15-ஆம் தேதிக்குள் 3-ஆவது தளம், களஞ்சியம் கட்டடம் பின்பு, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை -600025 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com