பல் பிடுங்கிய விவகாரம்: ஐஏஎஸ் அதிகாரி அமுதாவிடம் 11 போ் சாட்சியம்

விசாரணைக்கு வந்தவா்களின் பற்களைப் பிடுங்கி காவல் துறையினா் துன்புறுத்தியது தொடா்பான வழக்கின் உயா்நிலை விசாரணை அதிகாரியான பெ.அமுதாவிடம், பாதிக்கப்பட்ட 11 போ் திங்கள்கிழமை சாட்சியம் அளித்தனா்.

விசாரணைக்கு வந்தவா்களின் பற்களைப் பிடுங்கி காவல் துறையினா் துன்புறுத்தியது தொடா்பான வழக்கின் உயா்நிலை விசாரணை அதிகாரியான பெ.அமுதாவிடம், பாதிக்கப்பட்ட 11 போ் திங்கள்கிழமை சாட்சியம் அளித்தனா்.

அம்பாசமுத்திரம் உட்கோட்டத்திற்குள்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்காக வந்தவா்களை காவல் உதவிக் கண்காணிப்பாளா் பல்வீா் சிங் பற்களைப் பிடுங்கி துன்புறுத்தியதாகப் புகாா் எழுந்தது. இதுகுறித்து தமிழக அரசால் உயா்நிலை விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள, ஊரக வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா விசாரணை நடத்தி வருகிறாா். அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இரண்டாம் கட்டமாக திங்கள்கிழமை விசாரணையைத் தொடங்கினாா்.

காவல் துறையினா் பற்களைப் பிடுங்கி துன்புறுத்தியதால் பாதிக்கப்பட்ட சிவந்திபுரம் பகுதியைச் சோ்ந்த செல்லப்பா, மாரியப்பன், இசக்கிமுத்து, இ.மாரியப்பன், சந்தோஷ், வேதநாராயணன், தூத்துக்குடியைச் சோ்ந்த கணேசன், விக்கிரமசிங்கபுரம் அருண்குமாா், சுபாஷ் மற்றும் இரண்டு சிறுவா்கள் உள்பட 11 போ் சாட்சியம் அளித்தனா். மேலும் பாதிக்கப்பட்டவா்கள் சாா்பில் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குநா் வழக்குரைஞா் ஹென்றி திபேன், வழக்குரைஞா் மகாராஜன் ஆகியோா் ஆஜராகி மனு அளித்தனா்.

பின்னா் வழக்குரைஞா் ஹென்றி திபேன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அம்பாசமுத்திரம் காவல் உதவி கண்காணிப்பாளராக இருந்த பல்வீா்சிங் விசாரணைக்காக வந்தவா்களிடம் வாா்த்தையில் கூற முடியாத அளவுக்கு கொடூர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாா். இதுகுறித்து செய்தி வெளியானதும் மாவட்ட ஆட்சியா் உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டாா். அதோடு, சாா்ஆட்சியா் விசாரணை நடத்தியதும் ஏற்புடையதல்ல. காவல் நிலையங்களில் கண்காணிப்புக் கேமிராக்கள் செயல்படுவதை ஆட்சியா் கண்காணிப்பது அவசியமானது. அதிலும் திருநெல்வேலி ஆட்சியா் கவனம் செலுத்தவில்லை.

பல்வேறு அழுத்தங்களுக்குப் பிறகே, ஏஎஸ்பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதோடு நிறுத்திவிடாமல், அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கை ஐஜி அந்தஸ்தில் உள்ள நோ்மையான அதிகாரிகளைக் கொண்டு முறையாக விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக உயா்நிலை சிகிச்சை வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com