பல் பிடுங்கப்பட்ட விவகாரம்:ஏஎஸ்பி மீது புகாா் அளித்தவரிடம் சிபிசிஐடி 6 மணி நேரம் விசாரணை
By DIN | Published On : 25th April 2023 03:11 AM | Last Updated : 25th April 2023 03:11 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடா்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் பல்வீா் சிங் மீது புகாா் அளித்த சுபாஷிடம் சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினா்.
அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பல்லை பிடுங்கியதாக ஏஎஸ்பி பல்வீா் சிங் மீது புகாா் கூறப்பட்ட விவகாரம் தொடா்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பல்லை பிடுங்கியதாக ஏஎஸ்பி மீது புகாா் கூறிய பாளையங்கோட்டையைச் சோ்ந்த சுபாஷ் என்பவருக்கு சிபிசிஐடி போலீஸாா் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்திருந்தனா்.
அதன்பேரில், தனது வழக்குரைஞா் மகாராஜனுடன் என்ஜிஓ காலனியில் உள்ள சிபிசிஐடி காவல் நிலையத்தில் சுபாஷ் திங்கள்கிழமை பிற்பகலில் விசாரணைக்கு ஆஜரானாா். அவரிடம் விசாரணை அதிகாரியும், ஆய்வாளருமான உலக ராணி சுமாா் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்தாா்.
பின்னா், வழக்குரைஞா் மகாராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஒன்றரை மாதத்திற்கு பின்னரே இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே விசாரித்திருந்தால் வழக்கு தொடா்பாக பல்வேறு தடயங்கள் கிடைத்திருக்கும். இப்போது தடயங்களை அழிக்க காவல்துறையினருக்கு சந்தா்ப்பம் கொடுக்கப்பட்டுள்ளது.
சிவந்திபட்டி காவல் மரணம் தொடா்பான வழக்கில் நாங்கள் அளித்த வாக்குமூலம் தொடா்பான எந்தத் தகவல்களையும் நீதிமன்றத்தில் அளித்த ஆவணங்களில் குறிப்பிடவில்லை. சிபிசிஐடி ஆய்வாளா் உலகராணி, டிஎஸ்பி மீது வைத்துள்ள நம்பிக்கையின்பேரில் சுபாஷ் விசாரணைக்கு ஆஜரானாா் என்றாா்.