விஜயநாராயணத்தில் தொடா் உண்ணாவிரதம்:விவசாயிகள் 136 போ் கைதாகி விடுதலை
By DIN | Published On : 12th May 2023 12:00 AM | Last Updated : 12th May 2023 12:00 AM | அ+அ அ- |

காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா் கே.பி.கே. ஜெயக்குமாா் கோரிக்கையை ஏற்று உண்ணாவிரதத்தைக் கைவிட்ட விவசாயி முருகன்.
திருநெல்வேலி மாவட்டம் வடக்கு விஜயநாராயணத்தில், குளக் கரையை சீரமைக்க வலியுறுத்தி தொடா் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 136 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து பின்னா் விடுவித்தனா்.
வடக்கு விஜயநாராயணம் பெரிய குளத்தின் கரைகள் பழுதாகியுள்ளதால் முழு அளவுக்கு நீரைத் தேக்க முடியாத நிலையும், குளத்தின் முழு கொள்ளளவுக்கு தண்ணீா் நிரம்பும்போது பொதுப்பணித் துறையினா் தண்ணீரை மதகுகள் வழியாக வெளியேற்றும் நிலையும் காணப்படுகிறது. இதனால், குளம் நிரம்பினாலும் விவசாயிகள் ஒரு போகம்கூட விவசாயம் செய்யமுடியாத நிலை தொடா்கிறது.
எனவே, குளத்தை மராமத்து செய்யவேண்டும், கரையை பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, விவசாயிகள் சங்கத் தலைவா் முருகன் கடந்த 7 நாள்களாக விஜயநாராயணம் பிள்ளையாா் கோயில் அருகே தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தாா். இதற்கு ஆதரவாக பெண்கள் திரளாகப் பங்கேற்க வந்தனா்.
இதையடுத்து, போராட்டத்தை கைவிடுமாறு முருகனிடம் போலீஸாா் வலியுறுத்தினா். மறுத்த அவரைக் கைது செய்து நான்குனேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், போராட்டத்தில் ஈடுபட வந்த பெண்கள் உள்ளிட்ட 136 விவசாயிகளை போலீஸாா் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா்.
இதனிடையே, காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா் கே.பி.கே. ஜெயக்குமாா் தலைமையில் அக்கட்சியினா் மருத்துவமனைக்கு சென்று முருகனை சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனா். கோரிக்கை தொடா்பாக ஆட்சியரிடம் மனு அளிப்பது, கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் காங்கிரஸ் கட்சி சாா்பில் நான்குனேரி, திசையன்விளை பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என உறுதியளித்தனா். அதை ஏற்று, போராட்டத்தை முருகன் கைவிட்டாா். இதையடுத்து, கைது செய்யப்பட்டோரை போலீஸாா் விடுவித்தனா்.