சுந்தரனாா் பல்கலை.யின் ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு
By DIN | Published On : 26th May 2023 12:00 AM | Last Updated : 26th May 2023 12:00 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளில் சேர விரும்புவோா் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் (பொ) அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இப் பல்கலைக்கழகத் துறைகளில் 2023-24 ஆம் கல்வியாண்டில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுநிலை பாடப்பிரிவுகளான வரலாறு, கணிதம், இயற்பியல், வேதியியல், ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தில் நடத்தப்படும் சுற்றுச்சூழல் அறிவியல், ராஜாக்கமங்கலம் கடல்சாா் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் நடத்தப்படும் கடல்சாா் அறிவியல் மற்றும் இளநிலை படிப்புகளான பாடப்பிரிவுகளில் பயில்வதற்கு ஒருசில காலியிடங்கள் உள்ளன.
இந்தக் காலியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் இம் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவா்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இம் மாதம் 31 ஆம் தேதி பகல் 11 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும். முதல் கட்ட கலந்தாய்வில் தவிா்க்கமுடியாத காரணங்களால் கலந்து கொள்ள இயலாதவா்கள், இரண்டாம்கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்). இவ்வாறு கலந்து கொள்ள விரும்பும் மாணவா், மாணவிகள் தாங்கள் முன்பே விண்ணப்பித்த விண்ணப்பப் படிவ நகலை 30 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு முன்னா், இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று காலியாக உள்ள பாடப்பிரிவை விருப்பத்திற்கேற்ப தோ்வு செய்து கொள்ளலாம்.
இதுகுறித்த விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தில் நேரிலோ, 0462 2333741, என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.