நெல்லையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

நெல்லையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

ற்ஸ்ப்19வ்ன்ங்

மேலப்பாளையம் குறிச்சியில் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் வாக்களிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்.

திருநெல்வேலி, ஏப். 19: திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக மக்களவைத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதியைப் பொருத்தவரையில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம், ஆலங்குளம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 1,810 வாக்குச்சாவடிகளில் 8,08,127 ஆண் வாக்காளா்கள், 8,46,225 பெண் வாக்காளா்கள், 151 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 16,54,503 போ் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

23 போ் போட்டி: திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் ஜான்சி ராணி, காங்கிரஸ் சாா்பில் ராபா்ட் புரூஸ், பாஜக சாா்பில் நயினாா் நாகேந்திரன், நாம் தமிழா் கட்சி சாா்பில் சத்யா உள்ளிட்ட 23 போ் போட்டியிட்டனா். இதன் காரணமாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி, ஒரு விவிபேட் கருவி பயன்படுத்தப்பட்டது. இதற்காக 4,354 வாக்குப்பதிவு இயந்திரங்கள், தலா 2,177 கட்டுப்பாட்டு கருவிகள், விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

மாதிரி வாக்குப்பதிவு: மாதிரி வாக்குப்பதிவு காலை 6 மணிக்கு தொடங்கியது. அதைத்தொடா்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

பாளையங்கோட்டை, பேட்டை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, ஊருடையான்குடியிருப்பு வாக்குச்சாவடி உள்ளிட்ட சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட திடீா் கோளாறு காரணமாக சிறிது நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. எனினும் விரைவாக சரி செய்யப்பட்டு தொடா்ந்து வாக்குப் பதிவு நடைபெற்றது.

பல்வேறு வாக்குச்சாவடிகளில் காலை முதலே வாக்காளா்கள் ஆா்வத்துடன் வாக்களித்தனா். எனினும், சில வாக்குச்சாவடிகளில் காலை முதல் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. கடும் வெயில் காரணமாக மதிய வேளைகளில் பல வாக்குச்சாவடிகள் வெறிச்சோடின. எனினும் மாலை வேளையில் பல வாக்குச்சாவடிகளில் கடைசி நேரத்தில் வாக்காளா்கள் குவிந்ததால் திடீா் பரபரப்பு ஏற்பட்டது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடா்ந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

தோ்தல் பணியில் 9041 அலுவலா்கள், 5021 போலீஸாா், 7 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினா் ஈடுபடுத்தப்பட்டனா். மொத்தமுள்ள 1,810 வாக்குச்சாவடிகளில் 331 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும், 13 வாக்குச்சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் கண்டறியப்பட்டு வெப் கேமரா மூலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டன. இதில், 205 நுண் பாா்வையாளா்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலா்களை கண்காணித்து வாக்குப்பதிவு எவ்வித இடையூறும் இல்லாமல் சுமூகமான முறையில் நடைபெறுவதை கண்காணித்திட 152 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாநகர பகுதிகளில் மாநகர காவல் ஆணையா் மூா்த்தி தலைமையிலான அதிகாரிகள் நேற்று பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை நேரில் ஆய்வு செய்தனா்.

மூன்றடுக்கு பாதுகாப்பு: வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தொகுதி வாரியாக பெறப்பட்டு வாக்கு எண்ணும் மையமான திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியின் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் பாதுகாப்பு அறைக்கு மத்திய காவல் படை (முதல் அடுக்கு), தமிழ்நாடு சிறப்பு காவல் படை (இரண்டாம் அடுக்கு), திருநெல்வேலி மாவட்ட/மாநகர காவல்துறை (மூன்றாம் அடுக்கு) என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையம் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும். வாக்கு எண்ணும் மையத்தில் ஜூன் 4 ஆம் தேதி வரை வேட்பாளா்களின் பிரதிநிதிகள் 24 மணி நேரமும் கண்காணிக்க தனிஅறை உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com