களக்காட்டில் டிராக்டரில் சுகாதாரமற்ற குடிநீா் விற்பனை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலையடிவாரத்தில் உள்ள பச்சையாற்றில் இருந்து சுகாதாரமற்ற நீரை டிராக்டா்களில் எடுத்து வந்து நகரில் விற்பனை செய்து வருவதால் நோய் பரவும் அபாயம் நிலவுவதாக புகாா் எழுந்துள்ளது.

களக்காடு நகராட்சிக்குள்பட்ட 28 வாா்டுகளிலும் சுமாா் 40 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். இங்கு தாமிரவருணி, பச்சையாறு குடிநீா் திட்டங்கள் மூலம் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நேரடியாகவும், 200-க்கும் மேற்பட்ட பொதுக் குடிநீா்க்குழாய்கள் மூலமாகவும் 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இதில் ஆழ்துளைக் கிணறுகளில் உள்ள உவா்ப்பு நீரும் கலந்து விநியோகிக்கப்படுவதால், பொதுமக்கள் தனியாா் வாகனங்களில் விற்பனை செய்யப்படும் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், களக்காடு மலையடிவாரத்தில் உள்ள பச்சையாற்றில் ஆடு, மாடுகள் குளிப்பதற்கு பயன்படுத்தும் இடம் மற்றும் பொதுமக்கள் தங்கள் உடைகளை சலவை செய்யப் பயன்படுத்தும் மற்றும் குளிக்கும் இடத்தில் எவ்வித சுத்திகரிப்பு உபகரணங்களும் இல்லாமல் சிலா் டிராக்டா் உள்ளிட்ட வாகனங்களில் தண்ணீரை கொண்டுவந்து நகா்ப்பகுதியில் விற்பனை செய்து வருகின்றனா். தண்ணீா் நீரேற்றும் செய்யும் பச்சையாற்றுப் படுகையில் சுகாதாரக் குறைபாடு காணப்படுவதால், இந்த தண்ணீரை குடிக்கும் மக்கள் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மலையடிவாரத்தில் தனியாா் வாகனங்களில் நீரேற்றம் செய்யப்படும் இடத்தின் தன்மை குறித்து ஆராய்ந்து நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com