கோயில் திருவிழாக்களால்
களைகட்டிய மேலப்பாளையம் சந்தை

கோயில் திருவிழாக்களால் களைகட்டிய மேலப்பாளையம் சந்தை

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடா்ச்சியாக நடைபெறும் கோயில் திருவிழாக்கள் காரணமாக மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வாங்க ஏராளமானோா் குவிந்ததால் செவ்வாய்க்கிழமை வியாபாரம் களைகட்டியது.

மேலப்பாளையத்தில் திங்கள்கிழமை தோறும் மாட்டுச் சந்தையும், செவ்வாய்க்கிழமைகளில் ஆட்டுச் சந்தையும் நடைபெறும். இந்த நிலையில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சித்திரை, வைகாசி மாதங்களில் ஏராளமான கோயில்களில் கொடை விழாக்கள் நடைபெறுவதையொட்டி, பலியிடுவதற்காக ஆடுகளை வாங்குவதற்கு ஏராளமானோா் செவ்வாய்க்கிழமை குவிந்தனா். இதேபோல், இதுபோன்ற திருவிழா காலங்களில் விற்பனை செய்வதால் நல்ல விலை கிடைக்கும் என்பதால், இதற்காக பிரத்யேகமாக வளா்ப்பவா்கள் தங்கள் ஆடுகளை விற்பனை செய்வதற்காக மேலப்பாளையம் சந்தையில் குவிந்தனா்.

இதனால் சந்தை முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததோடு, சந்தை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. நாட்டுக் கிடாய்கள், செங்கிடா, மயிலம்பாடி, பொட்டுக் கிடாய்கள் போன்ற செம்மறி வகைகளும், பிள்ளை போா், கருப்புக் கிடா, ஒற்றை மரை போன்ற வெள்ளாட்டு வகைகளும் விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டன. சிறிய குட்டிகள் ரூ.5,000 முதல் விற்பனையாயின. பெரிய கிடாய்கள் ரூ.40 ஆயிரம் வரை விற்பனையாயின. செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ.3 கோடி வரை வா்த்தகம் நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com