~ ~
~ ~

பாபநாசம் வனச் சரகத்தில் ஓரே வாரத்தில் கூண்டில் சிக்கிய 4ஆவது சிறுத்தை -கிராம மக்கள் அச்சம்

டாணா எரிகல் பாறை பகுதியில் புதன்கிழமை தென்பட்ட 2 சிறுத்தைகள்.

அம்பாசமுத்திரம், மே 23: பாபநாசம் மலையடிவாரப் பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினா் வைத்தக் கூண்டில் கடந்த 7 நாள்களில் 4 சிறுத்தைகள் சிக்கின.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் வனச் சரகத்திற்குள்பட்ட அனவன்குடியிருப்பு, வேம்பையாபுரம் உள்ளிட்ட மலையடிவார கிராமங்களில் கடந்த சில நாள்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும்சிறுத்தைகள் ஆடு, நாய் உள்ளிட்ட வீட்டு வளா்ப்பு விலங்குகளை அடித்துத் தூக்கிச் சென்றன.

இதையடுத்து, அம்பாசமுத்திரம் கோட்டத் துணை இயக்குநா் இளையராஜா உத்தரவின் பேரில் பாபநாசம் வனச்சரகா் சத்யவேல் அறிவுறுத்தலில் வனத்துறையினா் மேற்கூறிய இடங்களில்சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைத்தனா்.

அதில், மே 17இல் வேம்பையாபுரத்தில் ஒரு சிறுத்தை, மே 21இல் அனவன்குடியிருப்பில் ஒரு சிறுத்தை, மே 22இல் மீண்டும் வேம்பையாபுரத்தில் ஒரு சிறுத்தை என 3 சிறுத்தைகள் பிடிபட்டன.

எனினும், அந்த இரு இடங்களிலும் கூண்டு வைத்து வனத்துறையினா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். இந்நிலையில் புதன்கிழமை இரவு பாபநாசம் அருகே எரிகல் பாறை பகுதி பொத்தையில் 2 சிறுத்தைகளின் நடமாட்டத்தை வனத் துறையினா் கவனித்துள்ளனா்.

இந்நிலையில், அனவன்குடியிருப்புப் பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கியது.

அதை வனத் துறை கால்நடை மருத்துவக் குழுவினா் வெள்ளிக்கிழமை பரிசோதனை செய்த பின் வனப்பகுதியில் விடுவதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினா் செய்து வருகின்றனா்.

தொடா்ந்து 7 நாள்களில் அடுத்தடுத்து 4 சிறுத்தைகள் கூண்டில் சிக்கியதால் பாபநாசம் மலையடிவார கிராமங்களில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

வனத்துக்குள் பாயும் சிறுத்தைகள்: இதனிடையே, ஏற்கெனவே மே 21,22 தேதிகளில் பிடிபட்ட 2 சிறுத்தைகளை வனத்துறையினா் முண்டந்துறை வனச்சரகத்திற்குள்பட்ட கன்னிகட்டி வனப்பகுதிக்கு கொண்டுசென்றுவிட்டனா்.

கூண்டிலிருந்து வெளியேறிய சிறுத்தையே வனத்துறை கால்நடைமருத்துவ ஆய்வாளா் அா்னால்ட் வினோத் தனது கைப்பேசி மூலம் விடியோ எடுத்துள்ளாா். அதை தமிழக வனத் துறை செயலா் சுப்ரியா சாகு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சிறிது நேரத்தில் அந்த விடியோ பரவலாகப் பகிரப்பட்டது.

 வியாழக்கிழமை இரவு வனத்துறைக் கூண்டில் சிக்கிய சிறுத்தை.
வியாழக்கிழமை இரவு வனத்துறைக் கூண்டில் சிக்கிய சிறுத்தை.

X
Dinamani
www.dinamani.com