மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகள்- பரிசளிப்பு

சென்னை ராமலிங்கர் பணி மன்றம் சார்பில்  அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் நினைவாக திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட

சென்னை ராமலிங்கர் பணி மன்றம் சார்பில்  அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் நினைவாக திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான  மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆண்டுதோறும் நடத்தப்படும் கலை இலக்கியப் போட்டிகளில் நிகழாண்டில் ஏற்கெனவே தஞ்சாவூர், விழுப்புரம்,  மதுரை, சென்னை, சேலம், திருநெல்வேலி ஆகிய 7 மண்டலங்களில் போட்டிகள் நடத்தப்பட்டிருந்த நிலையில், 8 ஆவது மண்டலமாக திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்  இசை, மனன மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இசைப் போட்டியில் திருவருட்பா 6 ஆம் திருமுறை- அபயத்திறன் ( முதல் 10 பாடங்களில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு),  மனனப் போட்டியில் திருவருட்பா ஆறாம் திருமுறை முறையீடு, பேச்சுப் போட்டியில் வள்ளுவர் வழியும் வள்ளலார் மொழியும் அல்லது பாரதி கவிதையில் மிளிர்வது காந்தியமே என்ற தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டியில் ஒளி வழிபாட்டில் ஓங்கும் தத்துவம் அல்லது  அருளியல் நெறியல்  அண்ணலும்- வள்ளலும்,  பேச்சுப் போட்டியில்  உயிர்க் கருணையே சன்மார்க்கம் அல்லது வடலூர் விளக்கில் காந்திய வெளிச்சம் என்ற தலைப்பிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.   விழா அரங்கில் கவிதைப் போட்டிக்கான தலைப்பு வழங்கப்பட்டது.
திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர், பெரம்பலூர், கோவை, கடலூர் போன்ற மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரி, கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என சுமார் 250-க்கும் மேற்பட்டோர் போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
பள்ளி அளவில் இசை, மனனம் மற்றும் பேச்சுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கும், கல்லூரி அளவில் பேச்சுப் போட்டியிலும் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்குப் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. கவிதை, கட்டுரைப் போட்டிகள் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 
இதைத் தவிர, மண்டலஅளவில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் 10 இடங்களைப் பெற்றவர்கள் பொள்ளாச்சியில் நடைபெறும் இருநாள் பயிலரங்கில் பங்கேற்கவும் தேர்வு செய்யப்பட்டனர்.
போட்டித் தொடக்க விழாவுக்கு மருத்துவர் வி. கேசவராஜ் தலைமை வகித்தார். புலவர் இரா. மாது போட்டியைத் தொடக்கி வைத்தார்.  பிற்பகலில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, கி. ஆ.பெ. விசுவநாதம் பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் வி. ஜெயபால் தலைமை வகித்து பரிசு வழங்கினார்.  திருச்சி மண்டல நடுவர் குழு ஒருங்கிணைப்பாளர் பழ. முத்தப்பன், கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை டி,எல். லதா, துணைத் தலைமையாசிரியர் இரா. இராம்குமார் ஆகியோரும்  பரிசு, சான்றிதழ் வழங்கினர்.
மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளருமான  பேராசிரியர் கிருங்கை சேதுபதி விழா நிகழ்வைத் தொகுத்தளித்து வரவேற்றார். புலவர் நாவை சிவம்,  பேராசிரியர்கள் என். மாணிக்கம், சி.க.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமண் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com