எந்தத் தேர்தலாக இருந்தாலும் திமுக-வுக்கு சாதகம் 

தமிழகத்தில் அடுத்து நடைபெறும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் திமுகவுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும்

தமிழகத்தில் அடுத்து நடைபெறும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் திமுகவுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் என்றார் திருச்சி மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும்,  தெற்கு மாவட்டச் செயலருமான கே.என்.நேரு.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்களவைத் தொகுதிக்கான திமுக செயல்வீரர்கள் கூட்டத்துக்குத் தலைமை வகித்து பேசியது:
தமிழக அரசியலில் 1989 சட்டப் பேரவை தேர்தலின்போது இருந்த நிலை இப்போது திமுக-வுக்கு கிடைத்துள்ளது. அப்போது, எம்ஜிஆர் மரணத்துக்குப் பிறகு அதிமுக-வில் பல்வேறு அணிகள் தோன்று திமுக வெற்றிக்கு வழியாக அமைந்தது. இப்போதும் அதேநிலைதான் உள்ளது. 
அதிமுக-வில் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி, டிடிவி தினகரன் என மூன்று அணிகளாக செயல்படுகின்றனர்.  அதிமுக-வில் பலமுனைகளில் வாக்குகள் பிரியும். திமுக-வின் தனித்த வாக்குகள் சிதறாமல் இருந்தாலே போதுமானது.
தேர்தலில் பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கலாம் என ஆளும்கட்சியும், பண பலம் கொண்ட கட்சிகளும் போட்டியிடலாம். கடந்த 8 ஆண்டுகளாக பதவியில் இல்லை என்பதற்காக திமுக-வினர் சுணக்கம் காட்டக் கூடாது. வாக்குச்சாவடி வாரியாக அமைக்கப்பட்ட கமிட்டி உறுப்பினர்கள் தங்களது சாவடிக்குள்பட்ட பகுதிகளில் தற்போதே தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும்.
தமிழகத்தில் அடுத்து நடைபெறும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் திமுக-வுக்கு மட்டுமே கள நிலவரம் சாதகமாக உள்ளது. திருச்சி மக்களவையில்உள்ள 6 தொகுதிகளிலும் திமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும்.கடந்த பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக இரு கட்சிகளும் சம பலத்துடன் கூடிய வாக்கு விகிதத்தை பெற்றிருந்தன. சில தொகுதிகளில் 37 ஆயிரம் வாக்குகள் அதிகமாகவும், சில தொகுதிகளில் 30 ஆயிரம் வாக்குகள் குறைவாகவும் கிடைத்தன. 
இந்த முறை 6 தொகுதிகளிலும் அதிக வாக்குகள் கிடைக்கும். திருச்சி மக்களவைத் தொகுதி திமுக வசமாகும். இதுமட்டுமல்லாது தேர்தல் நேரத்தில் உள்ள சூழலும் வெற்றியை தீர்மானிக்கும். நமது தரப்பின் பலவீனத்தை அறிந்து எதிர்தரப்பினர் தேர்தல் களம் காணுவர். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார் நேரு.
கூட்டத்தில், தொகுதிப் பொறுப்
பாளர்கள் ஏ.கே.எஸ். விஜயன் ப. சச்சிதானந்தம், வடக்கு மாவட்ட செயலர் ந. தியாகராஜன், எம்எல்ஏ-க்கள் பெரியண்ணன் அரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சௌந்தரபாண்டியன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ-க்கள்,  நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கஜா புயல் பாதித்த பகுதிகளில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை திமுக-வினர் சேகரித்து வழங்க வேண்டும் எனவும், நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com