பேருந்து வசதி, குடிநீர் கோரி மனுக்கள்

உப்பிலியபுரம் ஒன்றியம்,  வலசிகோம்பை கிராமத்துக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மலைவாழ் மக்கள்  கோரிக்கை மனு அளித்தனர்.

உப்பிலியபுரம் ஒன்றியம்,  வலசிகோம்பை கிராமத்துக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மலைவாழ் மக்கள்  கோரிக்கை மனு அளித்தனர்.
திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில்,  ஆட்சியர் கு. ராசாமணியிடம் அவர்கள் அளித்த மனு:
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், வைரிசெட்டிப்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட பசிலிக் கோம்பை கிராமத்தில் வசித்து வருகிறோம். பசிலிகோம்பை மற்றும் அதைச் சுற்றி அமைந்துள்ள பெரியசாமிகோயில், கல்லாத்துக் கோம்பை, காட்டுக்கொட்டாய், ஏரிக்காடு ஆகிய பகுதிகளில் சுமார் 600 குடும்பங்கள் உள்ளன. 
எங்கள் கிராமத்திலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு, வேலைக்குச் செல்வோர் சுமார் 20 கி.மீ. தொலைவு நடந்து வைரிசெட்டிப்பாளையம் சென்று அங்கிருந்தே பேருந்துகளில் செல்ல வேண்டி உள்ளது. இதனால் அனைத்துத் தரப்பினரும் அவதியுறுகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சிற்றுந்து வந்து சென்ற நிலையில், சாலை சரியாக இல்லை எனக் கூறி அச்சேவையை நிறுத்திவிட்டனர். தற்போது தார்ச்சாலை அமைக்கப்பட்ட நிலையில்,  பசிலிகோம்பை கிராமத்திலிருந்து பெரியசாமிகோயில், கல்லாத்துக்கோம்பை,   காட்டுக் கொட்டாய்,  ஏரிக்காடு, வைரிசெட்டிப்பாளையம், கொப்பம்பட்டி, உப்பிலியபுரம் வழியாக துறையூருக்கு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.
குடிநீர்த் தட்டுப்பாடு:   திருவெறும்பூர் ஒன்றியம், கிழக்குறிச்சி அடைக்கல அன்னை நகர்ப் பகுதி மக்கள் அளித்த மனு: இப்பகுதியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்கள் பகுதியின் 8-ஆவது தெருவில் 30,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.  தண்ணீர் நிரம்ப 2 நாள்கள் ஆவதால், 15 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது  ஒரு மாதமாகியும் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு வழங்கப்படும் அளவை குடிநீர் வடிகால் வாரியம் குறைத்துவிட்டதால், தொட்டியில் தண்ணீர் நிரம்புவதில் தடை ஏற்பட்டுள்ளது. எனவே   கீழ்நிலைத் தொட்டி ஒன்றை அமைத்து அதன் மூலம் குடிநீர் விநியோகிக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் பல தெருக்கள், கழிவுநீர் வாய்க்கால்கள் இல்லாமல் உள்ளன. அதையும் உடனடியாக அமைத்துத் தர வேண்டும்.
சிலையைச் சுற்றி பூங்கா:   எம்.ஜி.ஆர். நற்பணி மன்றத்தின் சார்பில் அதன் நிறுவனர்  செயலர் கண்ணன் என்கிற என். ராமகிருஷ்ணன் அளித்த மனு:
சத்திரம் பேருந்து நிலையத்தில் காமராஜர் சிலையைச் சுற்றியுள்ள கழிவுத் தொட்டிகளை அகற்ற வேண்டும். சிலையைச் சுற்றி பூங்கா அமைப்பதோடு,  ஜங்சன் ரயில் நிலையம் அருகிலுள்ள ராஜீவ்காந்தி சிலையையும் பராமரிக்க வேண்டும். 
மேலும், பாலக்கரையிலுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை உடனடியாகத் திறந்து பராமரிக்க சம்பந்தப்பட்ட துறைகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்,  அதை துறை அலுவலர்களிடம் வழங்கி விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com