மாட்டுவண்டிக்காக மணல் குவாரி கோரி முற்றுகை

திருச்சி மாவட்டம், பனையக்குறிச்சி காவிரியாற்றில் மாட்டுவண்டிக்காக மணல் குவாரிகள் அமைக்க வலியுறுத்தி  மாட்டுவண்டி உரிமையாளர்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம், பனையக்குறிச்சி காவிரியாற்றில் மாட்டுவண்டிக்காக மணல் குவாரிகள் அமைக்க வலியுறுத்தி  மாட்டுவண்டி உரிமையாளர்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் தமிழகத்தில் மணல் குவாரிகள் இயங்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தொடர்ந்து,   குறிப்பிட்ட பகுதிகளில் குவாரிகள் இயங்க அரசு அனுமதித்தது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் 14 குவாரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருவெறும்பூர் அருகே பனையக்குறிச்சி காவிரியாற்றுப் பகுதியில் 10 நாள்களுக்கு முன் மணல்குவாரி  தொடங்கப்பட்டு, அரசு வேலைகளுக்கு மட்டும் மணல் எடுக்கப்பட்டு, கொணலையிலுள்ள மணல் கிடங்கில் சேமிக்கப்படுகிறது.
இந்நிலையில், சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில்  மாட்டுவண்டித் தொழிலாளர்களுக்காக குவாரிகள் அமைக்கப்பட வேண்டும் என  வலியுறுத்தி மார்ச் 5-ல் போராட்ட அறிவிப்பும் வெளியிடப்பட்டது. மாட்டுவண்டிக்காக பனையக்குறிச்சி,  மாதவபெருமாள்கோயில், ஸ்ரீராமசமுத்திரத்தில் அரசு அனுமதி பெற்று குவாரி தொடங்கப்படும் என அப்போது நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது. 
அதுபோல அய்யாளம்மன் படித்துறை, முருங்கப்பேட்டை, வேங்கூர், சிறுகமணி, அப்பாதுறை பகுதிகளில் மாட்டுவண்டி மூலம் மணல் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித் துறை அறிவித்து 40 நாள்களுக்கு மேலாகியும் நடவடிக்கை இல்லாததைத் கண்டித்து,  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர்  சுப்ரமணியன் தலைமையில்  மாட்டுவண்டி உரிமையாளர்கள்  பனையக்குறிச்சி குவாரியை முற்றுகையிட்டு, மணல் அள்ளிய  இயந்திரங்களைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதையடுத்து அவர்களிடம் பொதுப்பணித் துறை அதிகாரிகள் செல்லிடப்பேசியில் பேசி,  ஒரு  வாரத்துக்குள்  மணல்குவாரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத்  தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com