"காந்தியத்தை இளைய தலைமுறையினரிடம் சேர்ப்பது அவசியம்'

இன்றைய இளைய தலைமுறையினரிடத்தில் காந்தியத்தை கொண்டு சேர்க்க வேண்டியது அவசியம் என

இன்றைய இளைய தலைமுறையினரிடத்தில் காந்தியத்தை கொண்டு சேர்க்க வேண்டியது அவசியம் என திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகாத்மா காந்தியின் 150ஆவது ஆண்டு கொண்டாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை வகித்து திருவாரூர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரித் தலைவர் எஸ். வெங்கட் ராஜலு பேசுகையில், காந்தியம் என்பது மகாத்மா சொன்னவையும் செய்தவையும் மட்டும் அல்ல. காந்தியில் தொடங்கி சென்ற நூறாண்டுகளில் உலகமெங்கும் உருவான நவீன அரசியல், பொருளியல், சூழலியல் சிந்தனைகளையும் ஒருங்கிணைத்தே காந்திய சிந்தனையை புரிந்து கொள்ள வேண்டும்.  இன்றைய இளைஞர்களுக்கு  மகாத்மாவின் தியாகம் முழுமையாக அறிந்திருக்கவில்லை. சுதந்திரத்தின் விலை என்ன?, அகிம்சையின் வலிமை, அன்னிய நாட்டவரும் ஏற்றுக்கொள்ளும் காந்தியம் குறித்து இளையதலைமுறைக்கு தெரியப்படுத்தவேண்டியது தேசப்பற்றாளர்கள் ஒவ்வொருவரின் கடமை என்றார். காவேரி பொறியியல் கல்லூரித் தலைவரும், தமிழக முன்னாள் அமைச்சருமான ந. நல்லுசாமி பேசியது: ஆசியக் கண்டம் மட்டுமல்லாது உலகின் அனைத்து கண்டங்களிலும் வியக்கத்தகுந்த தலைவராக இன்றளவும் திழ்பவர் மகாத்மா காந்தி ஒருவர் மட்டுமே. மகாத்மாவுக்கு தமிழர்கள் மீதும், தமிழகத்தின் மீதும் பெரிதும் நேசம் இருந்தது. அரையாடை அணிந்த நிகழ்வே திருப்பத்தூர் வழியாக மதுரைக்கு சென்றபோதுதான் நடந்தது. உலக அரங்கில் வேட்டியின் பெருமையையும், கலாசாரத்தையும் கொண்டு சேர்த்தவர். எளிமையின் அடையாளமாக திகழ்ந்தவர்.காந்தியடிகளுக்கு பல்வேறு இடங்களில் நினைவுச் சின்னங்கள் இருந்தாலும் திருப்பத்தூரிலும் வேட்டி குறித்து உணர்த்திடும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டும். அதற்கு தமிழ் ஆர்வலர்கள், தமிழ் எழுத்தாளர்கள், காந்திய சிந்தனையாளர்கள், காந்தியவாதிகள் ஒன்றிணைந்து முயற்சிக்க வேண்டும் என்றார் அவர்.
விழாவில், முதுபெரும் காந்தியவாதிகளான அ. கனகசபாபதி அண்ணாச்சி, கே.பி. காந்திப்பித்தன் ஆகியோருக்கு காந்தியச் செம்மல் விருதுகளை கவிஞர் மணமேடு குருநாதன் வழங்கினார். காந்தியமே இந்தியாவின் மார்க்சியம் எனும் தலைப்பில் தமிழகப் பசுமை இயக்கத் தலைவர் வி. ஜீவானந்தம், காந்தியத்தின் இன்றையத் தேவை எனும் தலைப்பில் கவிஞர் த. இந்திரஜித் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முசிறியைச் சேர்ந்த உலகத் தமிழ் சங்கச் செயலர் மு.ந. நித்யானந்தம், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத் தலைவர் வை. ஜவஹர் ஆறுமுகம், செயலர் இ. சேவியர், முத்தமிழ்க் காவலரின் மகன் கி.ஆ.பெ.வி. கதிரேசன், முனைவர் கரு. இராஜகோபாலன், எழுத்தாளர் மா. முருகேசன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com