ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பரமபதவாசல் திறப்பு: "கோவிந்தா' கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்!

வைகுந்த  ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம்  அருள்மிகு அரங்கநாதர்  திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை

வைகுந்த  ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம்  அருள்மிகு அரங்கநாதர்  திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை  பரமபதவாசல்  திறக்கப்பட்டது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா' கோஷத்துடன் அரங்கனைத் தரிசித்து  பரவசமடைந்தனர்.
108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்கும் உரியது  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில். 
இக்கோயிலில் பிரசித்தி பெற்ற வைகுந்த ஏகாதசி விழா  டிச. 7-ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல்பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும் விழாவில் பகல்பத்து உத்ஸவம்  8 ஆம் தேதி தொடங்கியது. இந்நாள்களில் நம்பெருமாள் தினம் ஒரு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு  காட்சி தந்தார். 
பகல்பத்து நிறைவு நாளான திங்கள்கிழமை  காலை 6 மணிக்கு நம்பெருமாள்  மோகினி  அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். அவரைத் தரிசிக்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். 
விழாவின் முக்கிய  நிகழ்வான பரமபதவாசல்  திறப்பு செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை சிறப்பு பூஜைகள், திருப்பள்ளி எழுச்சிக்குப் பின்னர்,  நம்பெருமாள் கருவறையிலிருந்து, விருச்சிக லக்னத்தில் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு திருவாபரணங்கள் அணிந்து  சிம்ம கதியில் அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டார். 
அதன்பின்னர்,  ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து, நாழிகேட்டான் வாயில் வழியே குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்கக் கொடிமரத்தை சுற்றி, துரைப்பிரகாரம் வழியாக விரஜாநதி மண்டபத்தை அடைந்தார். அங்கு,  பட்டர்களின் வேத மந்திரங்களைக்  கேட்டருளினார். அதைத்தொடர்ந்து அதிகாலை 5.30 மணிக்கு  பரமபதவாசல்  திறக்கப்பட்டது. அப்போது, அங்கு குவிந்திருந்த பக்தர்களின் "கோவிந்தா கோவிந்தா'  பக்தி முழக்கத்திடையே அருள்மிகு நம்பெருமாள்  பரமபதவாசலை கடந்து சென்றார். 
அதன் பின்னர் 5.45 மணிக்கு  பக்தர்கள் புடைசூழ சந்திரபுஷ்கரணி குளம் அருகே அமைக்கப்பட்டிருந்த பூந்தட்டிகள் வழியாகச் சென்று  மணல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள திருக்கொட்டகையில்,  தன்னைத் தேடிவந்த பக்தர்களுக்கு நம்பெருமாள் காட்சி தந்தார்.  தொடர்ந்து  7 மணிக்கு சாதரா மரியாதையை ஏற்று, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் காலை 8 மணிக்கு  எழுந்தருளினார். அங்கு  மாலை 6 மணி வரையில் பொதுஜன சேவை,  6 முதல் 8 மணி வரை அரையர் சேவை,  திருப்பாவாடை கோஷ்டியைத் தொடர்ந்து நம்பெருமாளுக்கு இரவு  9 மணிக்கு வெள்ளிச்சம்பா அமுது படைக்கத் திரையிடப்பட்டது.  அதையடுத்து   இரவு 10.30 முதல் 11 மணி வரை உபயதாரர் மரியாதையுடன் பொது ஜனசேவை என நள்ளிரவு வரை பக்தர்களுக்கு காட்சி தந்தார். 
பின்னர், நள்ளிரவு 12 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் அதிகாலை 1.15-க்கு கருவறை  சென்றடைந்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக உணவுத் துறை அமைச்சர் எஸ். காமராஜ், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் எஸ்.  வளர்மதி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ராமச்சந்திரன், திருச்சி ஆணையர் கல்யாணி,  அறங்காவலர் குழுத் தலைவர் வேணுஸ்ரீனிவாசன், ஸ்ரீரங்கம் கோயில் செயல் அலுவலரும் இணை ஆணையருமான பொன். ஜெயராமன், மற்றும் அறங்காவலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர். 
போலீஸ் குவிப்பு: விழாவையொட்டி ஜ.ஜி. வரதராஜூ  தலைமையில், மாநகரக் காவல் ஆணையர் அ. அமல்ராஜ், துணை ஆணையர்கள் ஏ. மயில்வாகனன்,  என்.எஸ். நிஷா, நேரடி மேற்பார்வையில்  திருச்சி மாநகர், புறநகர் உள்பட  பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரம் போலீஸார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கொட்டும் பனியில் காத்திருந்த பக்தர்கள்...
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் அரங்கனை தரிசிக்கவும்,  பரமபத வாயிலில் செல்லவும்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல்  இரவு முழுவதும் ஆங்காங்கே காத்திருந்து தரிசனம் செய்தனர்.
வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு நிகழ்வில் பங்கேற்று அரங்கனை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்துக்கு வருவது வழக்கம். பகல்பத்து நடைபெறும் 10 நாள்களில் வரும் பக்தர்கள் கூட்டத்தை விட இராப்பத்து நிகழ்வின்போது வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கும். அதிலும், முக்கிய நாளான பரமபதவாசல் திறப்பு நாளில் மட்டும் லட்சக்கணக்கானோர் அரங்கனை தரிசிக்க வருவர்.
நிகழாண்டும் வழக்கம்போலவே பல்லாயிரக்கணக்கானோர் ஸ்ரீரங்கத்தில் குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த இந்து அறநிலையத்துறையும், மாநகர காவல் துறையும் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆனாலும், திங்கள்கிழமை மாலை தொடங்கி  விடிய விடிய பக்தர்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் வீதிகளிலும், சாலைகளிலும், கோயில் வளாகத்தின் வெளியிலும் உள்பிரகாரங்களிலும் காத்திருந்து அரங்கனை தரிசனம் செய்தனர்.
அறநிலையத்துறை சார்பில் ரூ. 250 முதல் ரூ.3,000 வரையில் சிறப்பு  அனுமதி சீட்டுகள் விநியோகிக்கப்பட்டது. தவிர பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்கள், பத்திரிகையாளர்கள் என பலவிதமான சிறப்பு அனுமதி சீட்டுக்களும் வழங்கப்பட்டிருந்தன. அவற்றின் மூலம் திங்கள்கிழமை மாலை 5 மணி முதலே பிரிவு பிரிவாக கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்ட பக்தர்கள், குறிப்பிட்ட பிரமுகர்களைத் தவிர மற்ற அனைத்து சிறப்பு அனுமதிச்சீட்டு பெற்றவர்களும்  ஆங்காங்கே காத்திருக்க வைக்கப்பட்டனர்.  கருவறையிலிருந்து புறப்பட்டு ஒவ்வொறு சுற்றாக சென்ற அரங்கனை ஆங்காங்கே காத்திருந்த பக்தர்கள் தரிசித்து, பின்னர் பரமபத வாயிலை அரங்கன் அடைந்ததும் பரமபத வாயில் வழியாக அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். 
பெரும்பாலான பக்தர்கள் முதல் நாள் மாலை அல்லது இரவு கோயிலுக்குள் சென்று மறுநாள் காலை 6 மணிக்குப் பின்னரே கோயிலை விட்டு வெளியே வரமுடிந்தது. எனவே பக்தர்கள் இரவு முழுவதும் பொறுமையுடன் காத்திருந்து அரங்கனை தரிசித்தனர். அது தவிர கோயிலுக்கு வெளியே அனைத்து உள் வீதிகள், சாலைகள் என அனைத்து இடங்களிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் இரவு முழுவதும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இராப்பத்து முதல்நாளான செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி வரை சுமார் 2.75 லட்சம் பேர் தரிசனம் செய்ததாக  போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இராப்பத்து  

2 ஆம் நாளான இன்று நம்பெருமாள்  கருவறையிலிருந்து புறப்பாடு    பகல் 12.00
பரமபதவாசல் திறப்பு    பகல் 1.00
திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேர்தல்    பிற்பகல் 2.30
அலங்காரம் அமுது செய்ய திரை    பகல் 2.30.
பொது மக்கள் சேவை    மாலை 3.00
அரையர் சேவை (பொது மக்கள் சேவையுடன்)    மாலை  5.00
திருப்பாவாடை கோஷ்டி    இரவு  7.00
வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை    இரவு  7.30
உபயதாரர் மரியாதை (பொதுமக்கள் சேவையுடன்)    இரவு  8.00
புறப்பாட்டுக்கு திரை    இரவு  9.00
திருமாமணி  மண்டபத்திலிருந்து புறப்பாடு    இரவு 9.30
வீணை வாத்யத்துடன் கருவறை சேர்தல்...இரவு 10.30

மூலவர் முத்தங்கி சேவை
காலை  6 மணி முதல் காலை  9 மணி. 
பகல் 1 முதல் மாலை 6 மணி. 
பூஜா காலம் : காலை  9 மணி முதல்  நண்பகல்  12 மணி வரை 
( சேவை கிடையாது).
பரமபதவாசல் திறந்திருக்கும் நேரம்  பகல் 1 மணி முதல் இரவு 8மணி வரை.

டிச. 27 வரை பரமபதவாசல் திறந்திருக்கும்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட பரமபதவாசல் டிசம்பர் 27 ஆம் தேதி வரை குறிப்பிட்ட நேரத்தில் திறந்திருக்கும்.  டிச. 25 ஆம் தேதி மட்டும் திறக்கப்படாது. 
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில்  செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் இராப்பத்து 2ஆம் நாளான புதன்கிழமை முதல் 10 ஆம் நாளான டிசம்பர் 27 ஆம் தேதி வரை குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பக்தர்களின் சேவைக்காக திறக்கப்பட்டிருக்கும். இதில்,  புதன்கிழமை (டிசம்பர் 19) முதல் இராப்பத்து 6 ஆம் நாளான டிசம்பர்  23 (ஞாயிற்றுக்கிழமை) வரை பகல் 1 முதல் 8 மணி வரையிலும், ஏழாம் நாளான டிச. 24 ஆம் தேதி மாலை 4 முதல் இரவு 8.30 மணி வரையிலும் பரமபதவாசல் திறந்திருக்கும். இராப்பத்து எட்டாம் நாளான டிச. 25ஆம் தேதி பரமபதவாசல் திறப்பு கிடையாது. ஒன்பதாம் நாள் டிசம்பர் 26 ஆம் தேதி, பகல் 1 முதல் இரவு 8 மணி வரையிலும், பத்தாம் திருநாளான டிசம்பர் 27 ஆம் தேதி, காலை 10.30 முதல் இரவு 8 மணி வரையிலும் பரமபத வாசல் திறந்திருக்கும் என விழாக்கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com