கலிபோர்னியாவில் தமிழ் கற்போருக்கு உயர் கல்வியில் கட்டணச் சலுகை: லண்டன் பேராசிரியர் தகவல்

கலிபோர்னியாவில் தமிழ் கற்கும் குழந்தைகளின் சான்றுகளை கொடுத்தால் அவர்களுக்கு உயர்கல்வியில்

கலிபோர்னியாவில் தமிழ் கற்கும் குழந்தைகளின் சான்றுகளை கொடுத்தால் அவர்களுக்கு உயர்கல்வியில் கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது என லண்டன் பல்கலைக்கழகம், கோல்டுஸ்மித் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் சிவாப்பிள்ளை தெரிவித்தார்.
திருச்சி காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் சிறப்புச் சொற்பொழிவு திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஈ. கிறிஸ்டி செல்வராணி தலைமை வகித்தார்.  பேராசிரியர் மா. ராமர் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பேராசிரியர் சிவாப்பிள்ளை "அயலகத்தில் தமிழ்க் கற்றல் கற்பித்தலின் வளர்ச்சி' எனும் தலைப்பில் அவர் பேசுகையில், லண்டன் பல்கலைக்கழகத்தில் 2019 ஜூலை 17 ஆம் தேதி தமிழ் இருக்கை தொடங்கப்பட இருக்கிறது. ஒரு மொழியை ஏன் கற்க வேண்டும் என்பதற்குப் பத்துக் காரணங்கள் உள்ளன. ஒரு மொழியைக் கற்பதால் மகிழ்ச்சி உண்டாவதுடன், சமூக அந்தஸ்தும் வேலைவாய்ப்பும் கிடைக்கும். புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்குக் கணினி தொழில் நுட்பம் வழியே எவ்வாறு எளிதாகக் கற்பிப்பது என்பதை ஆசிரியர்களுக்குக் கற்பித்து வருகிறோம்.
அமெரிக்கா, கலிபோர்னியாவில் நிறைய குழந்தைகள் தமிழ் கற்கிறார்கள். அங்கே தமிழ் கற்றதற்கான சான்றிதழைக் கொடுத்தால் மாணவர்களுக்கு உயர்கல்வியில் கட்டணச் சலுகை உண்டு. லண்டனில் "பிரித்தானிய தமிழ்ப் பரீட்சை சபை' என்பதை ஏற்படுத்தி, தன்னார்வம் மிக்கப் பல பள்ளிகளில் வார இறுதியில் மாணவர்களுக்குக் கட்டணமின்றி தமிழைப் பயிற்றுவித்து வருகிறோம். பல்லூடகங்கள் (ஙன்ப்ற்ண் ஙங்க்ண்ஹ) மூலம் மின்வெளியில் மதிப்புமிக்கக் கற்றல் வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம். தமிழ்த் திரைப்படப் பாடல்களைக் காணொலியில் செவி வழியாகக் கேட்கச் செய்து, மேசையின் மீது அட்டைகளில் இருக்கும் பாடல் வரிகளைத் தேர்ந்தெடுத்துக் குழந்தைகளை வரிசைப்படுத்தச் சொல்கிறோம். இதன் மூலம் மகிழ்ச்சியான முறையில் சொற்களைப் பற்றியும் ஒலிப்புமுறைகளையும் குழந்தைகள் கற்கிறார்கள்.
குழந்தைகளுக்கு வெறுப்புணர்வு ஏற்படுத்துவதாகக் கற்றல் அமைந்துவிடக் கூடாது. அறிவியல் தொழில்நுட்பம் அறிந்த உலக மொழிகளில் தமிழ் மூன்றாவது இடத்தில் உள்ளது. மாணவர்களுக்குத் தாய்மொழி உணர்வை, தமிழ்ப் பற்றை உள்ளத்தில் விதைப்பதற்குத் திரைப்படப் பாடல்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.  அதை தொடர்ந்து மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினார். 
முன்னதாக, சுயநிதிப்பிரிவு தமிழ்த்துறையின் தலைவர்  தே. இந்திரகுமாரி வரவேற்றார். நிறைவாக பேராசிரியர் மு. மிர்தகடேஸ்வரர் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை பேராசிரியர்  கு. வடிவேல்முருகன் தொகுத்து வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com