75 ஆண்டு குப்பை குவியலை அழிக்க ரூ.49 கோடிக்கு நிர்வாக அனுமதி: சத்திரம் பேருந்து நிலையம் ரீமாடலுக்கு ரூ.17.34 கோடி

திருச்சி மாநகராட்சியின் பொலிவுறு நகரத் திட்டத்தில் அரியமங்கலம் குப்பை கிடங்கில் 75 ஆண்டுகளாக

திருச்சி மாநகராட்சியின் பொலிவுறு நகரத் திட்டத்தில் அரியமங்கலம் குப்பை கிடங்கில் 75 ஆண்டுகளாக தேங்கியுள்ள 7.59 லட்சம் கன மீட்டர் குப்பைகளை அழிக்க ரூ.49 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், சத்திரம் பேருந்து நிலையத்தை புனரமைத்து (ரீ மாடல்) புதிதாக கட்டமைக்க ரூ.17.34 கோடிக்கும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது: திருச்சி மாநகரை பொலிவுறு நகரங்களின் பட்டியலில் இணைத்து 2017இல் மத்திய அரசு அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, 8 நிலைகளில் பொலிவுறு நகரத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் திட்ட வரைவுகள் தயாரிக்கவும், மதிப்பீடுகள் தயார் செய்யவும், திட்டங்களை வடிவமைக்கும் பணி உள்ளிட்டவற்றுக்காக முதல்கட்டமாக ரூ.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன்படி, மாநகராட்சி சார்பில் திட்ட வரைவு தயாரித்து அனுப்பும் பணிகளுக்கு பொலிவுறு நகரங்களுக்கான திட்டத்தை செயல்படுத்தும் மத்திய அரசின் நகர்ப்புற அமைச்சகத்தின் உயர்நிலைக் குழு அனுமதி வழங்கி வருகிறது. இதில், மாநகராட்சிக்கு பெரிதும் சவாலாக இருந்து வந்த அரியமங்கலம் குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
9 வகைகளில் தரம் பிரிப்பு: அரியமங்கலம் கிடங்கில் உள்ள குப்பைகளை 9 நிலைகளில் தரம் பிரித்து அழிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 49 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீட்கப்படும் நிலத்தில் 30 ஏக்கர் மாநகராட்சியின் பொலிவுறு நகர பயன்பாட்டுக்கும், 10 ஏக்கர் இடத்தை எதிர்கால குப்பை கிடங்கு தேவை என்ற வகையில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரீ மாடல்: இரண்டு ஏக்கர் பரப்பில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் 225 நகரப் பேருந்துகள் வந்து செல்கின்றன. 57 நகராட்சி கடைகள் உள்ளன. மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.1.33 கோடி வருமானம் வருகிறது. இந்த பேருந்துநிலைய கடைகளை முழுமையாக அகற்றி பேருந்துநிலையப் பகுதியில் உள்ள கட்டுமானங்களையும் முழுவதும் அகற்றி புதிதாக அனைத்து வசதிகளுடன் புதிய பேருந்துநிலையம் கட்டப்படவுள்ளது. இதற்காக, ரூ.17.34 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்ப்டுள்ளது. இதன்படி, பேருந்துநிலையத்தில் அடித்தள சுரங்கப் பகுதியில் இருசக்கர வாகன நிறுத்தும் இடம் அமைகிறது. தரைத்தளத்தில் 30 பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதிகளுடன் 2 டெர்மினல் கட்டப்படுகிறது. மேலும், 17 கடைகள் கட்டப்படும். இதேபோல, முதல்தளத்தில் 11 கடைகள் கட்டப்படும். இவைத் தவிர, 8 கழிப்பறைகள்,நடை பாதை, பயணிகள் அமரும் பகுதி, உணவுக் கூடம், ஒளிரும் பலகைகள் என நவீன வசதிகளுடன் பேருந்துநிலையம் கட்டமைக்கப்படுகிறது. இந்த இரண்டு பணிகளுக்கும் தொழில்நுட்ப அனுமதி, ஒப்பந்தம் கோருதல் ஆகிய பணிகளை முடித்து டிசம்பர் மாத இறுதிக்குள் பணிகளை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

இதுவரை 5 திட்டங்களுக்கு ரூ.150 கோடியில் அனுமதி
பொலிவுறு நகரத் திட்டத்தில் திருச்சி மாநகராட்சியில் இதுவரை 5 திட்டங்களுக்கு ரூ.150 கோடி மதிப்பில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரூ.45 கோடியில் சுற்றுலா மேம்பாட்டில் மாநகர புரதான சின்னங்கள் புனரமைக்கப்படவுள்ளது. 
இவைத் தவிர, ரூ.20.28 கோடி மதிப்பில் 2 இடங்களில் பல்நோக்கு வணிக வளாகம் கட்டப்படுகிறது. ரூ.17.54 கோடியில் உய்யக்கொண்டான் கால்வாய் புனரமைக்கப்படவுள்ளது. ரூ.17.34 கோடியில் சத்திரம் பேருந்து நிலையம் புனரமைப்பு, ரூ.49 கோடியில் அரியமங்கலம் குப்பை கிடங்கு குப்பைகளை அழித்தல் என மொத்தம் 5 திட்டங்களுக்கு நிர்வாக அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதில், தில்லைநகரில் பல்நோக்கு வணிக வளாகம் கட்டும் பணி திங்கள்கிழமை தொடங்கப்படவுள்ளது. இதர பணிகளுக்கு தொழில்நுட்ப அனுமதி, ஒப்பந்தம் கோருதல் ஆகியவை முடிந்து 3 மாதங்களில் அடுத்தடுத்து பணிகள் தொடங்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com