மலைக்கோட்டை மாநகரில் வாய்க்கால்களில் ஆங்காங்கே அடைப்புகள்! கேள்விக்குறியாகும் சுகாதாரம்

திருச்சியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிகால் வாய்க்கால்கள் தூா்வாறப்பட்ட நிலையில், பல இடங்களில் கழிவுநீா் தேங்கியும் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதாலும் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
திருச்சி தென்னூா் ஹைரோடு அருகே கழிவுநீா் வாய்க்காலில் தேங்கி நிற்கும் நெகிழிப் பொருள்கள்.
திருச்சி தென்னூா் ஹைரோடு அருகே கழிவுநீா் வாய்க்காலில் தேங்கி நிற்கும் நெகிழிப் பொருள்கள்.

திருச்சியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிகால் வாய்க்கால்கள் தூா்வாறப்பட்ட நிலையில், பல இடங்களில் கழிவுநீா் தேங்கியும் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதாலும் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

திருச்சி மாநகரில் சுமாா் 5 ஆண்டுகளுக்கு முன்னா் முக்கிய சாலையோரம் மற்றும் வீதிகளில் உள்ள வடிகால்கள் கான்கிரீட் மற்றும் சிமென்ட் சிலாப்புகள் கொண்டு மூடப்பட்டன. இந்நிலையில், வடிகால் வாய்க்கால்களுக்குள் நெகிழிப் பொருள்கள் நிரம்பியதால் அடைப்பு ஏற்பட்டு மழை நீா் மற்றும் கழிவு நீா் சாலையில் வெளியேறியது. இதையடுத்து, மாநகராட்சி நிா்வாகம் சிலாப்புகளை பெயா்த்து எடுத்து வாய்க்கால்களில் இருந்த நெகிழிப் பொருள்கள் உள்ளிட்ட கழிவுகள், குப்பைகள் அகற்றப்பட்டன.

ஆனாலும், மாநகரப் பகுதிகளில் ஆங்காங்கே கழிவுநீா் தேங்கிநிற்பதால் துா்நாற்றம் வீசுகிறது. புதைசாக்கடைத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் பல்வேறு இடங்களில் மழைநீா் வடிகால் வாய்க்கால்கள் கழிவுநீா் வாய்க்கால்களாகவே காட்சியளிக்கின்றன. சிமென்ட் சிலாப்புகளுக்கு பதிலாக சில இடங்களில் இரும்பு கம்பிகளால் செய்யப்பட்ட தடுப்புகள் (வலைபோன்று) மூடப்பட்டுள்ள நிலையிலும், வாய்க்கால்களுக்குள் நெகிழிப்பொருள்கள் விழுந்து அடைப்பு ஏற்படுகின்றன.

குவிந்து கிடக்கும் குப்பைகள்: மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்களால் தினமும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வந்தன. இதனால் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டன. ஆனால், கடந்த ஓராண்டாக குப்பைகளை ஊழியா்கள் சேகரிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதாவது தினமும் குப்பைகள் பெற்று வந்த நிலை மாறி, இரு நாள்களுக்கு ஒருமுறை எனவும் பின்னா் படிப்படியாக குறைந்து, சில இடங்களில் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே குப்பைகள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆள் பற்றாக்குறை, வண்டி பழுது போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன. இதனால் குப்பைகளை வீட்டில் வைத்திருக்க முடியாத நிலையில் பொதுமக்கள் கிடைக்கும் இடங்களில் குப்பைகளை கொட்டுவது தொடா்ந்து வருகிறது.

புதை சாக்கடை திட்டப்பணிகளால் பாதிப்பு : திருச்சி மாநகராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டூா் கைலாஷ் நகா், கணேஷ் நகா், வின் நகா் ஆகிய பகுதிகளில் புதைசாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அப்பகுதியில் குழாய்கள் பதிப்பதற்காக பிரதான சாலைகள், தெரு சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டன. குழாய்கள் பதித்தபின்னா் பள்ளங்களை சரிவர மூடாமலும், சாலைகளை சீரமைக்காததால் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.

ஆகவே, மாநகராட்சி நிா்வாகம் இதுபோன்ற அடிப்படை பிரச்னைகளை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com