ஊழலற்ற சமூகத்தை கட்டமைக்க மாணவர்கள் பங்களிப்பு அவசியம்: காமராஜர் பல்கலை. துணைவேந்தர் பேச்சு

ஊழலற்ற சமூகத்தை கட்டமைக்க மாணவர்கள் பங்களிப்பு அவசியமானது என்றார் மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் எம். கிருஷ்ணன். 


ஊழலற்ற சமூகத்தை கட்டமைக்க மாணவர்கள் பங்களிப்பு அவசியமானது என்றார் மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் எம். கிருஷ்ணன். 
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அவர் மேலும் பேசியது:நமது நாடு குடியரசு ஆன சமயத்தில் உயர்கல்வி விழுக்காடு 8 சதவிதமாக இருந்தது. இப்போது,  80 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், பட்டம் பெற்றவர்களில் 40 முதல் 42 சதம் பேருக்கு வேலையில்லாமல் இருப்பதை மறுப்பதற்கில்லை.
பட்டம் பெற்று வாழ்க்கை பயணத்துக்கான தொடக்கத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்களுக்கு சமூகப் பொறுப்பும், குடும்பப் பொறுப்பும் அவசியமானது. குறிப்பாக கற்றுத்தந்த ஆசிரியருக்கும், கல்வி நிறுவனத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையில் வளர வேண்டும். மதிப்பெண் அடிப்படையிலான கல்விமுறையில் இருந்து திறனடிப்படையிலான கல்விமுறைக்கு வந்துள்ளதால் ஒவ்வொரு மாணவரும் தங்களது சுயதிறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். கற்றக் கல்வியானது  சமூகத்துக்கு பயனளிக்க வேண்டும். குறிப்பாக வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை உயர்த்துவதாக அமைய வேண்டும்.
இன்றைய சமூகத்தில் 4 முக்கிய பிரச்னைகள் தீர்க்க முடியாதவையாக உள்ளன. வேலைவாய்ப்பின்மை, குடிநீர் பற்றாக்குறை, சுற்றுச் சூழல் பிரச்னை, தனிமனித நீதி ஆகிய 4 காரணிகளுக்கான தீர்வுகளை மாணவர்கள் முன்னெடுக்க வேண்டும். ஊழலற்ற சமூகத்தை, வெளிப்படையான நிர்வாகத்தை கட்டமைக்க வேண்டும். மேன்மை மிக்க பதவிகளுக்கு போட்டியிட வேண்டும். இந்தப் பதவிகள் வழியாக சமூக நலன் சார்ந்த திட்டங்களையும், ஏழை, எளியோருக்கான திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்றார் அவர்.
விழாவுக்கு, திருச்சி, தஞ்சாவூர் திருமண்டலப் பேராயர் த. சந்திரசேகரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் த. பால் தயாபரன், கல்லூரிச் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். கல்லூரி சமய நெறியாளர் எம்.ஜே. ராஜையா, தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பாஸ்கர் மற்றும் பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர். 9 துறைகளைச் சேர்ந்த 587 மாணவ, மாணவிகளுக்கு இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டங்கள் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com