திமுக எம்பிக்கள் 37 பேரும் சொத்துகளை விற்று விவசாயக் கடன்களை அடைக்க வேண்டும்

தமிழகத்தில் திமுக கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற 37 எம்பி-க்களும் தங்களது சொத்துகளை விற்றாவது

தமிழகத்தில் திமுக கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற 37 எம்பி-க்களும் தங்களது சொத்துகளை விற்றாவது விவசாயக் கடன்களை அடைக்க வேண்டும் என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
திருச்சிக்கு வியாழக்கிழமை வந்த அவர் அளித்த பேட்டி:
புதுதில்லியில் பாஜகவின் மாநில அமைப்புச் செயலர்கள் கூட்டம் நடைபெறுகிறது. 3 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் கூட்டத்தில் கட்சியின் அமைப்பு ரீதியிலான தேர்தல் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்படும்.
அதிமுகவின் ஒற்றைத்தலைமை அமித்ஷா என கொங்குநாடு மக்கள் கட்சியின் தலைவர் தெரிவித்திருப்பது திமுக கூட்டணியில் அவர் பெற்ற ஓரிடத்துக்காக. இந்தக் கருத்தை கட்டாயம் திரும்பப் பெற வேண்டும். தேர்தல் ஆணையத்தால்தான் தேனியில் இளங்கோவன் தோற்றார் என்றால், இதர 37 தொகுதிகளில் வெற்றி பெற்றதும் தேர்தல் ஆணையத்தின் உதவியால் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். 
தமிழகத்தில் அதிமுக கூட்டணியுடன் பாஜக போட்டியிட்டது. தோல்வியைத் தழுவியுள்ளோம். ஆனால், நாடு முழுவதும் மகத்தான வெற்றியை பாஜக பெற்றுள்ளது. வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடருமா என்பது தேர்தல் நேர சூழலைப் பொருத்தது. 
தமிழகத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்னைக்கு 50 ஆண்டு காலம் ஆட்சி செய்த அரசுகளே பொறுப்பு. திமுக தனது ஆட்சிக் காலத்தில் எதையும் செய்யாமல் குடிநீர்ப் பிரச்னையை பெரிதாக்குவது ஏற்புடையதல்ல. 6 மாதத்துக்குள் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற 37 எம்பிக்களும் தங்களது சொத்துகளை விற்றாவது விவசாயக் கடன்களை அடைக்க வேண்டும். மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்களையும் அடைக்க வேண்டும். இல்லையெனில் 1967இல் பொய்யைச் சொல்லி ஆட்சிக்கு வந்ததைப் போன்று, இப்போது வெற்றி பெற்றதும் பொய்யைச் சொல்லியே என்பது நிரூபணமாகும்.  தமிழக மக்கள் ஏமாளிகள் அல்லர். எம்பி-க்களை தெருவில் இழுத்து வைத்துக் கேள்வி கேட்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
பாஜக தமிழகத்தைப் புறக்கணிக்கவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மட்டும் ரூ.40 ஆயிரம் கோடிக்கு வளர்ச்சித் திட்டங்களை பாஜக கொண்டு வந்தது. தமிழகத்துக்கு ரூ. 5 லட்சம் கோடிக்கு வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வந்தது. திமுக, காங்கிரஸ் கூட்டணியின் மதவாத அரசியல், பொய் பிரசாரத்தால் தோல்வியைத் தழுவினோம். வெற்றி பெற்ற 37 எம்பி-க்களும் பெங்களூரூ சென்று தங்களது கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆளும் மாநில அரசை வலியுறுத்தி காவிரியில் தண்ணீர் திறந்துவிட வைக்க வேண்டும் என்றார் அவர்.
திமுகவின் வெற்றி தற்காலிகமானது: புதுக்கோட்டை மாவட்டத்தில் மும்பையைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவின் மகன் திருமண விழாவில் பங்கேற்க  வந்த அவர் கூறுகையில்,   மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களிடம் பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி தற்காலிகமானது. 
அதிமுகவில் நடைபெறுவது அக்கட்சியின் உட்கட்சி விவகாரம். அதில் கருத்துத் தெரிவிக்க இயலாது. திமுகவிலும் உட்கட்சி பிரச்னை தீவிரமாக உள்ளது. இரண்டாம் நிலை தலைவர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com