கடவுச்சீட்டில் முறைகேடு: இருவர் கைது
By DIN | Published On : 04th April 2019 08:44 AM | Last Updated : 04th April 2019 08:44 AM | அ+அ அ- |

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து பயணித்த வடமாநிலத்தவர் இருவர் திருச்சி விமான நிலையத்தில், கைது செய்யப்பட்டனர்.
கோலாலம்பூரிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் ஆவணங்களை குடியேற்றப் பிரிவு போலீஸார் சோதனையிட்டனர். அப்போது, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சி. வக்ராசந்தீப் (45), மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த எஸ். அலிஷேக் சம்ஜத் (32) ஆகிய இருவரின் கடவுச்சீட்டில் தில்லியிலிருந்து மலேசியா சென்று வந்ததாக போலி முத்திரையிடப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து இருவரும் விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து வக்ராசந்தீப், அலிஷேக் சம்ஜத் ஆகிய இருவரும் மீது வழக்குப்பதிந்து கைது செய்த போலீஸார், அவர்களை சிறையில் அடைத்தனர்.