சமூக வலைதளங்களில் அவதூறு: நீதிமன்றத்தில் வழக்குத் தொடர விவசாயிகள் சங்கம் முடிவு

சமூக வலைதளங்களில் அய்யாக்கண்ணு மீது அவதூறு கருத்துக்களை பரப்பி வருவோர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

சமூக வலைதளங்களில் அய்யாக்கண்ணு மீது அவதூறு கருத்துக்களை பரப்பி வருவோர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. அய்யாக்கண்ணு தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் சி. பழனிவேல், மாநில துணைத் தலைவர்கள் செந்தில்குமாரசாமி, முருகேசன், ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலர்கள், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
பின்னர், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பி. அய்யாக்கண்ணு கூறியது:
தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கமானது தொடர்ந்து விவசாயிகளின் நலனுக்காக போராடி வருகிறது. போராட்டத்தால் எவ்வித பயனும் ஏற்படவில்லை.
இதையடுத்து மக்களவைத் தேர்தலில் பிரதமரை எதிர்த்து 111 விவசாயிகள் போட்டியிடுவதாக முடிவு செய்து, போராட்டம் குறித்த அறிவிப்புகளை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி அலுவலகங்களுக்கு அனுப்பினோம். ஆனால், பாஜக அலுவலகத்திலிருந்து அக் கட்சியின் தலைவர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு நேரில் சென்று பார்த்து கோரிக்கைகளை எடுத்துக் கூறினோம். எங்களது கோரிக்கைகளில் 5 கோரிக்கைகளை ஏற்பதாக உறுதியளித்தனர். தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடுவதாக தெரிவித்தனர். இதனையேற்று போராட்டத்தை மட்டும் விலக்கிக் கொண்டோம். ஆனால், தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எங்களது கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிகளை ஆதரிப்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு மீதும், சங்கத்தின் மீதும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். விவசாயிகள் சங்கத் தலைவர்கள் சிலரும் அவதூறாக பேசுகின்றனர். அத்தகைய நபர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக காவல்துறை டிஜிபி, மாநில சைபர் கிரைம் போலீஸில் புகார் அளிக்கவுள்ளோம். அவதூறு வெளியாகும் சமூக வலைதளங்களை முடக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com