"இலக்கு இருந்தால் எதையும் சாதிக்க முடியும்'

உலகில் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை, இலக்கு இருந்தால் நிச்சயம் சாதிக்க முடியும் என்றார்

உலகில் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை, இலக்கு இருந்தால் நிச்சயம் சாதிக்க முடியும் என்றார் தொழிலதிபரும்  பனானா லீப் உணவக உரிமையாளரும்,  தன்னம்பிக்கை பேச்சாளருமான  ஆர். மனோகரன்.
திருச்சியில், மக்கள் சக்தி இயக்கம் சார்பில் நடைபெற்ற,  ரயில்வே போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது : தொழிலதிபர் ஒருவர் தனது மகன்கள் 3 பேரில் யாரிடம் நிர்வாகத்தை ஒப்படைப்பது என்ற கேள்வி எழுந்தது. அப்போது, அவர்களுக்குள் போட்டி ஒன்றை வைத்தார். அதன்படி அருகில் உள்ள புத்த மடத்திற்கு சென்று அதிக சீப்புகளை விற்பவரிடம்தான் நிர்வாகத்தை ஒப்படைக்க முடிவு செய்து  போட்டியை வைத்தார்.
இதில்,  மூத்த மகன் 2 சீப்புகளும், அடுத்தவர் 10 சீப்புகளும் விற்ற நிலையில், இளைய மகன் மட்டும் 1,000 சீப்புகளை விற்றார்.  அதிக சீப்புகள் விற்றது குறித்து இளைய மகனிடம் தந்தை கேட்டபோது, புத்தர் பொன்மொழிகளை சீப்புகளில் எழுதி விற்றதாக தெரிவித்தார். இதையடுத்து நிர்வாகமும் அவரிடம் சென்றது. 
பொதுவாக புத்த மடத்தில் அனைவரும் மொட்டைத் தலையுடன்தான் இருப்பர். ஆனாலும் அங்கே அதிகப்படியான சீப்புக்களை விற்பனை செய்யவில்லையா? அதேபோலத்தான் மாணவ, மாணவியர் நினைத்தால் முடியாதது எதுவுமே கிடையாது. இலக்கை நிர்ணயித்துக்கொள்ளுங்கள் கண்டிப்பாக சாதிக்க முடியும். 
நிகழ்ச்சிக்கு வந்துள்ளவர்கள் ரயில்வே போட்டித் தேர்வு எழுதுவது என முதல் படி ஏறி விட்டீர்கள். அடுத்த படிகளும் எளிது.  தேர்வு எழுதும் வரையில் வேறு எதற்கும் மனதில் இடம் தராதீர்கள், தேர்வு ஒன்றையே பிரதானமாக நினைத்து, பயிற்சியில் வழங்கப்படும் குறிப்புகளுடன், ஒவ்வொரு மாணவ, மாணவியரும் ஒன்று சேர்ந்து குழு ஆலோசனைகள், குழு படிப்பு போன்றவைகள் மூலம் திட்டமிடுங்கள்.  அனைவரின் மூளைத் திறன்களையும் சேர்த்து தேர்வை எழுதி, போட்டியில் பங்கேற்கும் அனைவரும் தேர்ச்சி பெற தினம் தினம் உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். தேர்வாகி விட்டதாகவே தினம் 10 நிமிடம் கனவு காணுங்கள், அப்போதுதான் அதன் தாக்கம் உங்களில் உத்வேகத்தை ஏற்படுத்தி வெற்றி பெற தூண்டும்.
யாரையும் குறை கூறாதீர்கள், பாராட்டுங்கள். அப்போது முகம் மலர்வதுடன் நல்ல ஆரோக்கியமான மன நிலையும் ஏற்படும் இது நீங்கள் தேர்வில் மட்டுமல்ல வாழ்க்கையிலும்  வெற்றி பெற உதவும் என்றார். முன்னதாக, நிகழ்ச்சிக்கு மக்கள் சக்தி இயக்க  மாநில  ஆலோசகர் கே. சி. நீலமேகம் தலைமை வகித்தார்.  
மாநில பொதுச்செயலாளர் எல். பாஸ்கரன், மாவட்ட செயலாளர் ஆர். இளங்கோ,  மாநில ஆலோசகர் சி. தங்கவேல், மாநில துணை பொதுச் செயலாளர் வே.ரா. சந்திரசேகரன்,  பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி  நிறுவனர் சாத்தனூர் சிவா, முதல்வர் பாலா பாரதி,  ஜென்னிஸ் உணவக மேலாண் கல்லூரி இயக்குநர் மு. பொன்னிளங்கோ, பேராசிரியர் சதீஷ்குமார்,  பயிற்சியாளர்கள்,  ஜலால், திருமாறன், ஜாகிர்உசேன், சூர்யகுமார், செல்வின் செல்வகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.  இதில், ஏராளமான மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.
பயிற்சி நடைபெறும் நேரம்: பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 முதல் இரவு 8 வரையில்  நடைபெறும்.  பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர், கே.சி. நீலமேகம்-94433 01713 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com