திருச்சி மாவட்டத்தில் பதிவான அஞ்சல் வாக்குகள்: வேட்பாளர்களின் முகவர்களுக்கு ஆட்சியர் விளக்கம்

திருச்சி மக்களவைத் தேர்தலில் மாவட்டம் முழுவதும் பதிவான அஞ்சல்  வாக்குகள் குறித்து அரசியல் கட்சியினர், வேட்பாளர்களின் முகவர்களுக்கு ஆட்சியர் சு. சிவராசு விளக்கம் அளித்தார்.


திருச்சி மக்களவைத் தேர்தலில் மாவட்டம் முழுவதும் பதிவான அஞ்சல்  வாக்குகள் குறித்து அரசியல் கட்சியினர், வேட்பாளர்களின் முகவர்களுக்கு ஆட்சியர் சு. சிவராசு விளக்கம் அளித்தார்.
திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 பேரவைத் தொகுதிகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கைக்காக இயந்திரங்கள் தயார்நிலையில் உள்ளது. இதேபோல, அஞ்சல்  வாக்குகளும் பேரவைத் தொகுதி வாரியாகவும், ஆசிரியர்கள், காவல்துறை, ராணுவத்தினர் என முத்தரப்பிலும் பதிவு செய்யப்பட்டது.
அஞ்சல் வாக்குகள் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு விளக்கம் அளிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான சு. சிவராசு கூறியது: திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்டு ராணுவத்தில் பணியாற்றும் 199 பேர், ஆசிரியர்கள் 726 பேர் அஞ்சல் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதுமட்டுமல்லாது, தேர்தல் பணியில் ஈடுபடும்போது அந்தந்த பேரவைத் தொகுதி வாரியாக அஞ்சல் வாக்குகளை பதிவு செய்யவும், காவல்துறையினர் திருச்சி கலையரங்கில் வாக்குகளை பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்படி, திருச்சி கலையரங்கத்தில் 1,622 போலீஸார் அஞ்சல் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். மணப்பாறை லட்சுமி மெட்ரிக் பள்ளியில் 458 பேர், திருவரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 187 பேர், திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் 287 பேர், ஹோலி கிராஸ் கல்லூரியில் 189 பேர் தேர்தல் பணியின்போது தங்களது அஞ்சல் வாக்குகளை பதிவு செய்தனர்.
மேலும், திருவெறும்பூர் மான்போர்ட் மேல்நிலைப் பள்ளியில் 135 பேர், லால்குடி மெஸ்ட் மெட்ரிக் பள்ளியில் 430 பேர், மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 326 பேர், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் 280 பேர், துறையூர் சௌடாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 283 பேர், புதுக்கோட்டை ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 362 பேர், புதுக்கோட்டை அரியூர் குமரன் தொழில்நுட்பக் கல்லூரியில் 29 பேர், ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 71 பேர், இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 25 பேர், புதுப்பட்டி அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 47 பேர் என மொத்தம் 12 மையங்களில் 4,731 அஞ்சல் வாக்குகள் வரப்பெற்றுள்ளன.
திருச்சி மக்களவைத் தொகுதிக்கு மட்டும் 5,457 அஞ்சல் வாக்குகள் வரப்பெற்றுள்ளன. வாக்கு எண்ணும் பணியின்போது தபால் வாக்குகள் தொடர்பாக வேட்பாளர்களுக்கோ, அரசியல் கட்சிகளுக்கோ எந்தவித சந்தேகங்களும் இருத்தல் கூடாது என்றார் ஆட்சியர்.
இக் கூட்டத்தில், தேர்தல் வட்டாட்சியர் முத்துசாமி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ஜவஹர் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வேட்பாளர்களின் முகவர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com