திருமணம் செய்யுமாறு மாணவியை மிரட்டிய இளைஞருக்கு 6 ஆண்டுகள் சிறை

திருமணம் செய்துகொள்ளுமாறு  மாணவிக்கு மிரட்டல் விடுத்த இளைஞருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  திருச்சி மகளிர் நீதிமன்றம்  புதன்கிழமை தீர்ப்பளித்தது.


திருமணம் செய்துகொள்ளுமாறு  மாணவிக்கு மிரட்டல் விடுத்த இளைஞருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  திருச்சி மகளிர் நீதிமன்றம்  புதன்கிழமை தீர்ப்பளித்தது.
திருச்சி விமான நிலையம் அருகே உள்ள திலகர் தெருவைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் அஜித்குமார் (21). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியை காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால்  மாணவி காதலை ஏற்க மறுத்துள்ளார். 
இந்நிலையில் அந்த மாணவியின் கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்அப்) உள்ள  புகைப்படத்தை தன்னுடைய படத்துடன் இருப்பது போல இணைத்து, அதனை மாணவியிடம் காட்டி, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியுள்ளார். மேலும், அந்த படத்தை  பல்வேறு நபர்களுக்கும் அனுப்பி அவதூறு பரப்பியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, இதுகுறித்து தனது சகோதரரிடம் தெரிவித்துள்ளார். அவரும் அஜித்குமாரிடம் புகைப்படம் குறித்து கேட்டுள்ளார். அப்போது, அவரையும் அஜித்குமார் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து பொன்மலை மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி அஜித்குமார் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், புதன்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, இளைஞருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5,000 அபராதமும், கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி மகிழேந்தி தீர்ப்பளித்தார். அரசு வழக்குரைஞராக வெங்கடேசன் ஆஜரானார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com