நேந்திரன் வாழை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

கேரளத்துக்கு அதிகளவில் செல்லும் நேந்திரன் வாழையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கேரள மாநிலத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படும் நேந்திரன்


கேரளத்துக்கு அதிகளவில் செல்லும் நேந்திரன் வாழையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படும் நேந்திரன் வாழை, வயலூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், தொட்டியம், துறையூர், பேட்டைவாய்த்தலை, நவலூர், லாலாப்பேட்டை, குளித்தலை, எட்டரை, கோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது.
காவிரியில் போதிய தண்ணீர் வரத்து இல்லாத காரணத்தாலும், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவும் திருச்சி, கரூர் மாவட்டத்தில் நேந்திரன் சாகுபடி தாமதமானது. இதையடுத்து அறுவடையிலும் தாமதம் ஏற்பட்டது. இரு மாவட்டங்களிலும் சேர்த்து 20 ஆயிரம் ஏக்கரில் நேந்திரன் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2.50 லட்சம் வரை செலவு செய்துள்ள விவசாயிகளுக்கு இப்போது விலை வீழ்ச்சியடைந்திருப்பதால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஒரு ஏக்கரில் ஆயிரம் வாழைகள் வரை பயிரிடப்படும். இதில், 10 சதவீத கழிவு போக 900 வாழைத்தார்கள் கிடைக்கும். கடந்தாண்டு ஒரு கிலோ நேந்திரன் ரூ.40 வரை விலைபோனது. வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.600 முதல் ரூ.700 வரை விலை கிடைத்தது. ஆனால், இப்போது, ஒரு கிலோ ரூ.10-க்கு விலை போகிறது. தார் ஒன்றுக்கு ரூ.200 முதல் 300 வரை மட்டுமே விலை கிடைக்கிறது. இதனால், சாகுபடி செலவைகூட ஈட்ட முடியாத நிலையில் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆனால், நேந்திரன் சிப்ஸ் விலை கிலோ ரூ.400 ஆக உள்ளது. சிப்ஸ் தயாரிக்க கொள்முதல் செய்யும் வாழையை மட்டும் அடிமட்ட விலைக்கு கொள் முதல் செய்கின்றனர் என்கின்றனர் விவசாயிகள்.
இதுதொடர்பாக, வயலூரைச் சேர்ந்த நேந்திரன் விவசாயி பரமசிவம் கூறியது: தாமிரவருணி ஆற்றுப்படுகையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகம் சாகுபடி நடந்து ஏப்ரலில் நல்ல விளைச்சல் வந்துள்ளது. எனவே, பெரும்பாலான வியாபாரிகள் திருநெல்வேலி வாழைகளுக்கு முக்கியத்துவம் அளித்து கொள்முதல் செய்கின்றனர். திருச்சி வாழைகளுக்கு உரிய விலை தருவதில்லை. குளிர்சாதன கிடங்கில் வைத்து நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்ய முடியாது. ஏனெனில், காய்கள் நன்கு முதிர்ந்து அறுவடையாகிருப்பதால், கிடங்கில் வைத்தால் பழமாகிவிடும். பின்னர், சிப்ஸ் தயாரிக்க ஏற்றதாக இருக்காது. எனவே, கிடைத்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்றார்.
இதுதொடர்பாக, தமிழக வேளாண்மைத்துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ள தமாகா விவசாய அணி மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் கூறியது: விலை வீழ்ச்சி காலங்களில் வாழை விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க ஏதுவாக சத்துணவில் வாழைப்பழம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழைப் பழத்திலிருந்து மதிப்புக் கூட்டு பொருளாக பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவ வேண்டும். குடிசைத் தொழிலாக நேந்திரன் சிப்ஸ் தயாரிக்கும் கூடங்களை திருச்சி, கரூர் மாவட்டங்களில் ஏற்படுத்தி மகளிருக்கு வேலைவாய்ப்பை அளிப்பதுடன், வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கலாம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com