ரயில்வேயில் தமிழர்களை பணியமர்த்தக் கோரி பொன்மலையில் மே 3-இல் மறியல் போராட்டம்

தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியிடங்களில் தமிழர்களை பணியமர்த்தக் கோரி பொன்மலையில் மே 3-இல் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளதாக


தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியிடங்களில் தமிழர்களை பணியமர்த்தக் கோரி பொன்மலையில் மே 3-இல் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளதாக  தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் பெ. மணியரசன் புகார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, திருச்சியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது: திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பழகுநர் பணிக்கு அண்மையில் நடைபெற்ற நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டு, பணியமர்த்தப்பட்ட 300 பேரில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை. இதேபோல், சென்னை பெரம்பரில் உள்ள கேரேஜ் பணிமனைக்கு பழகுநர் பணிக்கு நடைபெற்ற நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்களில் 500 பேர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கோவை எஸ் அண்ட் சி (சிக்னல் அண்ட் கம்யூனிகேஷன்ஸ்) பணிமனையில் 2 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில், 1,800 பேர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியிடங்களில் 90 சதவீதம் வெளிமாநிலத்தவர்களே பணிபுரிகின்றனர்.
இதேபோல, அஞ்சல்துறை, பெல், படைக்கலன் தொழிற்சாலை என தமிழகத்தில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான 18 துறைகளில் திட்டமிட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய விதிமுறைகளை தளர்த்தி நாடு முழுவதும் உள்ள அனைவரும் பங்கேற்க வாசல் திறக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது தமிழ் தெரியாவர்கள் வேலையில் சேர்ந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழ் கற்கலாம் என அவகாசமும் அளிக்கிறது. இந்தச் சூழலில் தமிழக வேலைவாய்ப்புகள் முழுமையாக வட மாநிலத்தவர்களும், வெளி மாநிலத்தவர்களுமே சென்றுவிடும். இதனால், தமிழர்கள் அவர்களது சொந்த மண்ணிலேயே வேலைவாய்ப்பு இல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்று அடிமையாக வாழும் நிலை உருவாகும். ஏற்கெனவே 90 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்து காத்திருக்கின்றனர். 
பொன்மலை ரயில்வே பணிமனை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில்வே பணியிடங்களிலும் 10 சதவீதத்துக்கும் மேல் உள்ள வெளிமாநிலத்தவர்களை வெளியேற்ற வேண்டும். அந்த பணியிடங்களில் தமிழர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொன்மலை பணிமனை முன்பாக மே 3ஆம் தேதி மறியல் போராட்டம் நடைபெறும் என்றார். 
பேட்டியின்போது, இயக்க பொருளாளர் ஆனந்தன், மாவட்ட நிர்வாகிகள் இலக்குவன், கவித்துவன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com