திருச்சி மண்டல அளவிலான திருக்குறள் போட்டிகள்

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை மண்டல அளவிலான திருக்குறள் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.


திருச்சி: திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை மண்டல அளவிலான திருக்குறள் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.

ஸ்ரீராம் இலக்கியக் கழகத்தின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே திருக்குறள் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், திருக்குறள் கருத்துகளை பரப்பவும், தமிழ்ப் பேச்சாற்றல் மற்றும் தனித்திறமைகளை வளர்த்தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் திருச்சி உள்ளிட்ட 10 மண்டலங்களில் போட்டிகள் நடத்தப்படும். 

திருச்சி மண்டலத்துக்குள்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான திருக்குறள் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவை இ.ஆர். மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இடைநிலை, மேல்நிலை, கல்லூரி என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 370-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இடைநிலைப் பிரிவில் 6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், மேல்நிலைப் பிரிவில் 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரிப் பிரிவில் இளங்கலை, முதுகலை, பட்டப்படிப்பு, தொழில்நுட்பப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டது.

போட்டிகளை ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் கோட்ட மேலாளர் மு. விஜய், இ.ஆர். மேல்நிலைப் பள்ளியின் தலைவர் ஆர். ராகவன் ஆகியோர் தொடங்கி வைத்து வென்றோருக்குப் பரிசு வழங்கினர். 

ஓவியப் போட்டியில் இடைநிலைப் பிரிவில் மாணவி எம். தர்ஷினி ஸ்ரீ, மேல்நிலைப் பிரிவில் மாணவி நிதி ஸ்ரீ, கல்லூரிப் பிரிவில் மாணவி லலிதா ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். 

பேச்சுப் போட்டியில், இடைநிலைப் பிரிவில் மாணவி வித்யா ஸ்ரீ, மேல்நிலைப் பிரிவில் மாணவர் ஆதவ் குகன், கல்லூரிப் பிரிவில் அருண் வெங்கட் ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். 

முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. 

மண்டலப் போட்டிகளில் வென்றோர் வரும் அக்.5 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் பங்கேற்பர். 

இதில் வெல்வோருக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7,500, மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என ஸ்ரீராம் நிறுவன கோட்ட மேலாளர் க. திருமுருகன் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com