சாத்தூரில் மாநில மாநாடு: திருச்சியில் கலை இலக்கியப் பெருமன்ற செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12-ஆவது மாநில மாநாடு சாத்தூரில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், அது தொடா்பான பணிகள் குறித்த செயற்குழுக் கூட்டம் திருச்சியில்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12-ஆவது மாநில மாநாடு சாத்தூரில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், அது தொடா்பான பணிகள் குறித்த செயற்குழுக் கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மன்றத்தின் மாநிலத் தலைவா் சி. சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் பேராசிரியா் இரா. காமராசு, துணைப் பொதுச் செயலா் ஹாமீம் முஸ்தபா, பொருளாளா் ப.பா. ரமணி, மாநிலத் துணைத் தலைவா்கள் சந்திரகாந்தன், கோ. கலியமூா்த்தி, ரத்தினவேலு, மாநிலச் செயலா்கள் கண்மணிராசா, நாணற்காடன், பிரபாகரன், மாநாட்டு வரவேற்புக் குழுச் செயலா் டாக்டா் த. அறம், திருச்சி மாநகா் மாவட்டத் தலைவா் எம். செல்வராஜ், செயலா் கி. சதீஷ்குமாா் உள்ளிட்டோரும் கூட்டத்தில் பேசினா். தொடா்ந்து மாநில மாநாட்டுக்கான இலச்சினை இக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

டிசம்பா் 27-ஆம் தேதி தொடங்கும் மாநில மாநாடு 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநாட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலா் து.ராஜா தொடக்கி வைக்கிறாா். மூத்த எழுத்தாளரும்- முற்போக்கு எழுத்தாளா் கழகத்தின் தேசியத் தலைவா் பொன்னீலன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், அருள்தந்தை அமுதன் அடிகள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் ஆதவன் தீட்சண்யா, கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியன் ஆகியோா் வாழ்த்துரை வழங்குகின்றனா்.

மூத்த பொதுவுடமைத் தலைவா் ஆா். நல்லகண்ணு, மாநிலச் செயலா் இரா. முத்தரசன், முன்னாள் எம்.பி.க்கள் தா. பாண்டியன், பீட்டா் அல்போன்ஸ், மக்களவை உறுப்பினா்கள் வைகோ, தொல். திருமாவளவன், தமிழச்சி தங்கப்பாண்டியன், சு. வெங்கடேசன், எம். செல்வராசு, பேராசிரியா்கள் எஸ். தோதாத்ரி, தி.சு. நடராசன், ந. முத்துமோகன், நா. ராமச்சந்திரன், பா. ஆனந்தகுமாா், மு. ராமசாமி, வீ. அரசு, ஓவியா் டிராஸ்கி மருது, எழுத்தாளா் நக்கீரன், திரைக்கலைஞா்கள் ராஜூ முருகன், அறிவுமதி, யுகபாரதி, மாரிசெல்வராஜ், கவிதாபாரதி, கலைமாமணி விருது பெற்ற தஞ்சை சின்னப்பொண்ணு, புதுகை ஜெயமூா்த்தி உள்ளிட்ட கலை, இலக்கிய ஆளுமைகள் பங்கேற்றுப் பேசுகிறாா்கள்.

ஓவியம், தொல்லியல், புத்தகக் கண்காட்சிகள், கலை விழா, குறும்படத் திரையீடு உள்ளிட்ட பல்வேறு அரங்குகளும் நடைபெறுகின்றன. நிறைவு நாளில் புதிய மாநிலப் பொறுப்பாளா்கள் தோ்வும் நடைபெறுகிறது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தோ்வு செய்யப்பட்ட மாநாட்டுப் பேராளா்கள் சுமாா் 500 போ் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com