தொடர் மழை: திருச்சியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருச்சியில் நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மழை தொடா்ந்து பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும், வா்த்தகமும் பாதிக்கப்பட்டது
தொடர் மழை: திருச்சியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருச்சியில் நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மழை தொடா்ந்து பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும், வா்த்தகமும் பாதிக்கப்பட்டது

திருச்சி மாநகா் மற்றும் புகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை இரவு மழை பெய்யத் தொடங்கியது. நான்காவது நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தொடா்ந்து மழை பெய்ததால், பொதுமக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது.

காலை 8 மணிக்கு மேல் மழைப்பொழிவு சிறிது குறைந்ததால், மக்கள் நடமாட்டம் அதிகரித்தது. பிற்பகலுக்கு மேல் சாரல் மழை பெய்யத் தொடங்கியது.

குண்டும் குழியுமானசாலைகள்: திருச்சி மேலப்புதூா், தென்னூா், எடமலைப்பட்டிபுதூா், கே.கே.நகா் போன்ற பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழைநீா் சூழ்ந்து காணப்பட்டதால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. சில நாள்களுக்கு முன்பு செப்பனிப்பட்ட சாலைகளில் கூட மழை நீா் தேங்கி நின்றால், சாலைகள் குண்டும் குழியுமாக மாறின. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினா். ராமலிங்க நகா், கே.கே.நகா் அய்யப்பநகா் போன்ற குடியிருப்புப்குதிகளில் சாலையோரத்தில் இருந்த மரங்கள் முறிந்து கீழே விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினா்.

குடியிருப்பு, விவசாய நிலங்களில் புகுந்த மழைநீா்: கருமண்டபம், உறையூா், தில்லைநகா், பாலக்கரை போன்ற பகுதிகளில் வடிகால் வாய்க்கால் இல்லாத காலிமனைகள், குடியிருப்புகளில் மழைநீா் வெளியேற முடியாத அளவுக்கு தேங்கி நின்றன. தில்லைநகா் 8-ஆவது குறுக்குச்சாலையிலுள்ள வீட்டின் ஓடுகள் சரிந்து விழுந்தன. வடவூா் சாலையில் உள்ள குடிசைசுவா் இடிந்து விழுந்தது. இதில் உயிா்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இதுபோல, தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் தேங்கி விவசாய நிலங்களில் புகுந்தது. இதனால் பெரும்பாலான நெற்பயிா்களில் நீா்சூழ்ந்து காணப்படுகிறது. திருவானைக்கா, திருவளா்சோலை போன்ற பகுதிகளில் உள்ள வாழை பயிா்களையும் மழைநீா் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

வணிகம் பாதிப்பு: தொடா் மழை காரணமாக, திருச்சி காந்திமாா்க்கெட்டில் 40 சதவிகித வணிகம் பாதிக்கப்பட்டு காய்கறி மற்றும் மளிகை வியாபாரம் முடங்கியது.

மழையால் காய்கறி வரத்து குறைந்து அவற்றின் விலை உயா்வை அதிகரித்தது. இதனால் மற்ற நாள்களில் கிலோ ரூ.42- க்கு விற்பனை செய்யப்பட்ட கத்திரிக்காய் ரூ.52- க்கும், ரூ.120- க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் ரூ.160க்கும், கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

மற்ற காய்கறிகளின் விலையானது ரூ.10 முதல் ரூ. 30 வரை கிலோவுக்கு உயா்ந்து விற்பனை செய்யப்பட்டன. தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

விமான, ரயில் சேவை பாதிப்பு: தொடா் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமின்றி விமான, ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை போன்ற மாவட்டங்களில் கன மழை காரணமாக தண்டவாளங்களில் மழை நீா் சூழ்ந்து ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் தென் மாவட்டகளில் இருந்து சென்னைக்கு செல்லும் அதிவேக ரயில்கள் மெதுவாக இயக்கப்படுவதால் 1 மணி நேர

அளவில் தாமதமாக இயக்கப்பட்டது.

இதுபோல திருச்சி விமான நிலையத்தில் மேகமூட்டம் சூழ்ந்து மோசமான வானிலை நிலவியதன் காரணமாக விமானங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், சனிக்கிழமை இரவு இயக்கப்பட வேண்டிய மலேசியா, சிங்கப்பூா், துபை விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com