பொங்கல் பரிசுக்கு செல்லும் திருவளர்ச்சோலை கரும்புகள்!

திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் நியாய விலைக்கடைகளுக்கு பொங்கல் பரிசுக்கு வழங்குவதற்காக 

திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் நியாய விலைக்கடைகளுக்கு பொங்கல் பரிசுக்கு வழங்குவதற்காக திருவளர்ச்சோலையில் கரும்புகள் வெட்டி அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக அரசின் சார்பில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக 1கிலோ பச்சரிசி,1கிலோ சர்க்கரை,20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஆகியவற்றை காகித உறைகளில் போட்டு, அத்துடன் ரூ 1000 ரொக்கம், 2 அடி நீளமுள்ள கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஜன.14 ஆம் தேதி வரை நடைபெறஉள்ளது.
திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக வழங்கப்படும் கரும்புகளை திருவளர்ச்சோலையில் விவசாயிகள் அறுவடை செய்து துண்டுகளாக வெட்டி அனுப்பி வருகின்றனர்.
 திருச்சி-கல்லணை சாலையில் உள்ள திருவளர்ச்சோலை பகுதியில் பொங்கல் பண்டிக்கைக்கான கரும்பு சாகுபடி ஆண்டுதோறும் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நடைபெற்று வருகிறது.  நிகழாண்டில் அறுவடை செய்யப்பட்ட கரும்புகளை பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு விவசாயிகள் வெட்டி அனுப்புகின்றனர்.
இதுகுறித்து, , திருவளர்ச்சோலை கரும்பு விவசாயி ஆனந்த் பாபு கூறியது: பொங்கல் பண்டிகைக்காக ஆண்டுதோறும் கரும்பு, மஞ்சள் பயிர் சாகுபடி செய்து வருகிறோம். கடந்தாண்டைவிட இந்தாண்டு அதிக பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெய்த மழையால் காவிரியில் பெருக்கெடுத்து வந்த தண்ணீரும் கரும்பு சாகுபடிக்கு கை கொடுத்தது. இதனால், நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது.
 வழக்கமாக பொங்கல் சந்தைக்கு கரும்புகளை கொண்டு செல்வோம். இல்லையெனில் இடைத்தரகர்கள், வியாபாரிகளை விளைநிலங்ளுக்கே நேரில் அழைத்து வந்து விலை நிர்ணயம் செய்து கரும்புகளை வெட்டிச் செல்வது வழக்கம். ஆனால், தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு கரும்புகள் கொள்முதல் செய்யப்படுவதால் நிகழாண்டு அதற்கு வழங்கவுள்ளோம். ஒரு கரும்பை இரண்டாக வெட்டி நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பும் வகையில் தயார் செய்துள்ளோம். ஒரு கரும்பு துண்டுக்கு ரூ.8 என விலை நிர்ணயம் செய்துள்ளனர். இதனால் ஒரு கரும்புக்கு ரூ.16 விலை கிடைக்கிறது என்றார்.
 மற்றொரு விவசாயி திருஞானம் கூறியது: 
நிகழாண்டில் கரும்பு விளைச்சல் அதிகமாக இருந்தாலும் அண்மையில் ஏற்பட்ட கஜா புயலால் கரும்புகள் அனைத்தும் சாய்ந்துவிட்டன. அவற்றை கற்கள் கட்டி நிமிர வைப்பதற்கென தனியாக கூலி ஆள்களை நியமித்ததால் வழக்கமான செலவைவிட கூடுதல் செலவாகிவிட்டது. கடந்தாண்டு ஒரு கரும்பு ரூ.16 முதல் ரூ.18 வரை விற்பனை செய்தோம். நிகழாண்டு நியாய விலைக்கடைக்கு ரூ.16-க்கு கொள்முதல் செய்கின்றனர். விரும்பிய விவசாயிகள் இதற்காக கரும்புகளை வெட்டி அனுப்புகின்றனர். வெளிச்சந்தையில் கரும்பு ஒன்றுக்கு ரூ.21 என விலை கிடைக்கும் என்பதால் சிலர் கரும்புகளை வெட்டாமல் உள்ளனர். பொங்கல் நெருங்கும் தருணத்தில் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com